Saturday, April 24, 2010

ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!



a>
"புன்னரையன் கோவிலிலே

வெள்ளை விளிசங்கின்

பேரரவம் கேட்டிலையோ'

என்று காலை நேரத்து கோவில் ஓசையை வருணித் தாள் ஆண்டாள்.

பழங்காலத்தில், காலை நேரத்தில் கோவில்களில் மங்கலச்சங்கு ஒலித்து, "கோவிலுக்கு அனைவரும் வருக' என்று அழைத்த காரணத்தால் "விளிசங்கு' எனப் பட்டது. "சங்கொலி' என்பது வழிபாடுகளின் தொடக்கம்.

"கோழி சிலம்பச் சிலம்பும் குரு கெங்கும்;

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்'

என்று மணிவாசகர் அருளியதும் இங்கு குறிக்கத் தக்கது.

ஒலியும் இசையும் வழிபாட்டின் அங்கங்கள் ஆகும்.

இறைவன் ஒலி வடிவானவன். ஏழிசையாய் விளங்குகின்றவன். இவற்றை எடுத்துக் காட்டுகின்ற அடையாளங்களாக சில தெய்வங் களின் கைகளில் இசைக்கருவிகள் திகழ்கின்றன. சிவனது கையில் இருப்பது உடுக்கை. வீணையை ஏந்தி இருக்கின்றவர்கள் சரஸ்வதியும், நாரதரும். கிருஷ்ணனின் கையில் புல்லாங்குழல் இருக்கின்றது. சங்கு விஷ்ணுவின் கையில் கம்பீரமாக வீற்றிருக்கின்றது. மத்தளம் கொட்டு கின்றவர் நந்திதேவர். இசை வடிவ மான இறைவனை, இசை மூலமாகவே வழிபட்டு அடைவது மிக எளிது என்று இவை உணர்த்துகின்றன. இராவணன், திருஞான சம்பந்த சுவாமிகள், ஆனாய நாயனார், திருப்பாணாழ்வார், அருண கிரிநாதர் முதலானோர் இசை மூலமாக இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றவர்களே.




அசரீரி


ஒலி வடிவமாகவே இருக்கின்ற ஒரே தெய்வம் அசரீரி. சரீரமற்றது என்ற பெயருக்குத் தகுந்தபடி இது எங்கும் எப்போதும் உருவமற்றது; அருவம். தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஒன்றைச் சுட்டிக்காட்டுதல், ஓர் உண்மையைப் புலப்படுத் துதல் முதலிய நெருக்கடியான சூழ்நிலைகளில், அந்த நெருக்கடிகளை நீக்க அசரீரியானது தெய்வத்தின் குரலாக ஒலிக்கின்றது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும் கதைகளும் நூற்றுக்கணக்காக உள்ளன. சில தலங்களில் அசரீரியின் ஆணையைக் கேட்டு மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தல புராணங் கள் தெரிவிக்கின்றன. எனவே, அசரீரி என்பது ஒரு முக்கியமான ஒலிவடிவத் தெய்வம்; தெய்வீக ஒலி.

இனி, சில கோவில்களில் கேட்கக்கூடிய அபூர்வமான - அதிசயமான தெய்வீக ஒலிகள் பற்றிய விவரங்களைக் காண்போம்.




ஓங்கார ஒலி

ஓங்கார ஒலி எல்லாவற்றுக்கும் அடிப்படை யானது; பிரணவம். ஆன்மிகத்தில் ஓங்கார ஒலியும், அதன் "ஓம்' என்ற வடிவமும் எப்போதும் புனிதமாக மதிக்கப்படுகின்றன.

திருக்குற்றாலத் திருக்கோவில் ஒரு சங்கைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு வேறு எந்தக் கோவிலிலும் இல்லை. சங்கைப் போன்றது கோவில். சங்கில் இடையறாமல் ஒலிக்கின்ற ஓங்கார ஒலியைப் போன்றவன்- அந்த ஒலியாகவே விளங்குகின்றவன் இறைவன்.

விநாயகரின் வடிவம் ஓங்கார அமைப்புடையது. ஓங்கார ஒலியைத் தருகின்ற விநாயகர் ஒருவர் காஞ்சி புரம், பஞ்சுப்பேட்டை, திருவோண காந்தன் தளி என்ற கோவிலில் வீற்றிருக்கின்றார். விநாயகர் சிலை அருகில் காதை வைத்து உற்றுக் கேட்டால் ஓங்கார ஒலி கேட்கின்றது. இது ஓர் அதிசயம்தானே!

திருவொற்றியூர் கௌடீசுவரர் சந்நிதியிலும் ஓங்கார ஒலியைக் கேட்க முடியும்.

திருச்செந்தூரில், கொடி மரத்தின் எதிர்ப்புறச் சுவரில் ஒரு துளை இருக்கின்றது. இதன் வழியே பார்த்தால் செந்திலாண்டவனின் திருவடிகளில் சரணடைய ஓடி வரும் கடல் அலைகளைக் காணலாம். அதே துளையில் காதை வைத்து உற்றுக் கேட்டால் "ஓம்' என்ற ஒலி இடையறாமல் ஒலிப் பதைக் கேட்கலாம்.



வேத ஒலி

திருவிடைமருதூர் கோவிலில், ஆவுடையார் சந்நிதியின் பின்புறச் சுவரில் சில துளைகள் இருக்கின்றன. இவற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டால், சிலர் வேதப்பகுதிகளை ஓதுவதைப் போன்ற நுட்பமான ஒலிகள் ஒலிப்பதை உணரலாம். இங்கு தேவர்கள் ஆவுடையாரைச் சுற்றி நின்று வேதப்பகுதிகளை இசைப்பதாக ஐதீகம்.

கடல் ஒலி

திருக்காட்டுப்பள்ளியில், தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு மேற்கு மதிற்சுவரின் அருகில், கடல் ஒலியைப் போன்ற ஓர் ஒலி தொடர்ந்து கேட்கின்றது. இது எப்படி? ஆன்மிகப் புதிர்கள் சிலவற்றிற்கு விடையே கிடைப்பதில்லை.

எதிரொலிகள்

திருவரங்கம், திருவையாற்றுத் திருக்கோவில்களில், குறிப்பிட்ட பகுதிகளில் நின்று, "ரங்கா'- "ஐயாறா' என்று இறைவரது திருப்பெயர்களை சத்தமாகக் கூறினால் அப்பெயர்களின் அடுக்கிய எதிரொலிகள்- அசரீரி வாக்கைப்போல அடுத்தடுத்து ஒலிக்கின்றன. கோவிலின் கட்டடத்திறன் எதிரொலிகளை உருவாக்குகின்றது.

தேனீக்களின் ரீங்காரம்

சித்தாய்மூர் (சிற்றேமம்; சிற்றாய்மூர்) திருநெல்லிக் காவுக்கு அருகில் இருக்கின்ற திருத்தலம். இங்கே இறைவன் சந்நிதியின் தென் பக்கத்தில், கல் சாளரத் தில் ஒரு தேன்கூடு உள்ளது. இதிலுள்ள தேன் அபிஷேகத் திற்குப் பயன்படுகின்றது. தேன் கூட்டிற்கும் நாட்பூசை உண்டு.

முன்னர், பிரம்ம ரிஷி ஒருவர் தினமும் அர்த்தயாமத்தில் வந்து இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவர் வருகின்ற நேரம் மிகக் கடந்தது. கோவில் நடை காப்பிடப்பட்டது. தரிசனம் கிடைக்காமல் வருந்திய முனிவர், தேனீயின் வடிவம் கொண்டு கோவிலில் புகுந்து வழிபட்டு அங்கேயே தங்கி விட்டார். இவரைப்போலவே பல சித்தர்கள் தேனீக்களாக வந்து இறைவனை வழிபடுகின்றனராம். ஆகவே, தேனீக்களின் ரீங்கார ஒலிகளை இறைவனது சந்நிதியில் கேட்க முடிகின்றது.

இதேபோலத் திருக்கண்ணமங்கையில், தாயார் சந்நிதியின் சாளரத்தில் ஒரு தேன்கூடு நூற்றாண்டு களாக இருக்கின்றது. இதையும் தினமும் பூஜிக்கின்ற னர். இப்பூஜையை பக்தர்கள் நேரில் தரிசிக்கலாம்.

திருக்கண்ண மங்கையில், தாயாரின் திருமணத் தைக் காண தேவர்களும், அவரைத் தரிசிக்க தவசிகளும் தேனீக்களின் வடிவங்களுடன் வந்து, ஓங்கார ரீங்காரம் செய்கின்றனராம்.

வண்டொலி

பிருங்கி முனிவர் வண்டின் வடிவமெடுத்து, அர்த்தநாரீசுவரர் வடிவத்தைத் துளைத்துச் சென்று சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்ட திருத்தலம் திருவெண்டுறை. இங்கு வண்டின் மென்மையான ரீங்கார ஒலி கருவறையின் அருகில் ஒலிப்பதை இன்றும் கேட்க முடிகிறது.



மணி ஒலி

பூஜை நேரத்தில் கோவிலிலும் வீட்டிலும் ஒலிக் கின்ற மணி ஒலி மிகவும் முக்கியமான தெய்வீக ஒலியாகும். இத்தெய்வீக ஒலி, அதைக் கேட்பவர்களின் இதயத்தின் ஆன்மிக- தெய்வீக உணர்வுத் துடிப்பு களைத் தூண்டக்கூடிய சக்தியுடையது.

இதயத்தில் நீங்காமல் நிலைத்திருக்கின்ற இறைவனுக்கு இதயத்தின் துடிப்பே தெய்வீக மணியொலியாகி விடுகிறது.

கோவில் மணி ஒலியைக் கேட்டவுடனே வீட்டில் பூஜை வழிபாடுகளைத் தொடங்குவது மிகவும் நல்லது. கோவிலிலும் வீட்டிலும் ஒரே நேரத்தில் பூஜையும் ஆராதனையும் நடைபெறும்படி கவனித் துக் கொள்ள கோவில் மணி ஒலியை முக்கியமாகக் கருத வேண்டும்.

பூஜைக் காலங்களில் தொடர்ந்து மணியடிப்பதை தாச மார்க்கத்தில் ஒரு மார்க்கமாக திருமூலர் குறிப்பிடுகின்றார்.

எனவே, நாதாந்த நாயகனை- நாதரூபனை- பிரணவ மூர்த்தியை- இசை ரூபனை- தெய்வீக நாத ஒலிகள் ஒலிக்க வழிபாடு செய்வது மிகவும் பொருத்தம்தானே

என்றும் அன்புடன்
பசுமை சகோதரர்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails