சைக்கிள் நம் வாழ்க்கையோடு எப்படி இரண்டற அல்லது மூன்றர கலந்துள்ளது என்பதற்கு சில கலைச்சொற்களின் டிக்ஷனரியை இங்கு தருகிறேன்.
ரெண்டு பேரும் சைக்கிள் - இரு நண்பர்கள் அல்லது நண்பிகள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று பொருள்படும்.
க்ரீஸ் போய்ட்டுது - இரு பெரியவர்கள் தங்கள் ஆண்மைக்குறைவு பற்றி கருத்து பகிர்கிறார்கள்.
வால்ட்யூப்பால காத்து போகுது - ஒரு மாணவி தான் மாதவிடாய் காரணமாக வகுப்புக்கு அல்லது கோவிலுக்கு வர முடியாது என்பதை தன் நண்பிக்கு எடுத்தியம்புகிறாள்.
அவன் கம்பி - அவர் மைக்கல் ஜாக்சனின் ரசிகர் அல்லது ஓரின சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வல்லுனர்.
ஓயில் மாத்தி கனகாலமாச்சு - தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.
பெல் மூடி - வழுக்கை தலை
பூட்டு உடைச்சாச்சு - ஒரு பெண் முதன்முறையாக இனப்பெருக்க முயற்சியில் ஈடுபடுத்த பட்டிருக்கிறாள்.
பெடல் - அல்லக்கை, அல்லது ஜால்ரா போடுபவன்.
வால்க்கட்டை - உயரம் குறைந்தவன்.
பக்கிள் - நொண்டியபடி நடப்பவர்.
'வீட்டில நிக்கிறீங்களோ அல்லது சைக்கிள்ள வெளீல வந்திட்டாங்களோ'
இப்படி ஒருவர் மற்றவரை போனில் விசாரித்தால் அவர்கள் அரசியல் பேசுகிறார்கள் என்று அறிக.
மீண்டும் இது போல பல அரிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு ஃபளஷ்பேக்!
அப்போது தான் நான் சைக்கிள் ஓட பழகியருந்த காலம், இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டுருந்தேன்.
சொப்பர் சைக்கிள் என்ற சிறிய வகை துவிச்சக்கரவண்டிகள் அப்போது புழக்கத்திலருந்தது.
அது நீல கலரில் இருக்கும் இருக்கைக்கு பின்புறம் முதுகு புறம் சாய்ந்து இருக்கக்கூடியவாறு குஷன் காணப்படும்.
பின் கரியல் கிடையாது, சிறிய முன் பார் இருக்கும், சராசரி மனிதனின் முழங்காலிக்கு கீழ் தான் அதன் உயரம் இருக்கும்.
எனக்கு வாயச்ச சொப்பர் சைக்கிள் வெளிநாடு சென்ற உறவினனுக்காக வாங்கி அவன் கனடா சென்றதும் விறகு அடுக்கி வைக்கும் தட்டியில் கிடப்பிலிருந்து என் அண்ணா ஓடி அவன் வளர்ந்ததும் மீண்டும் பரணுக்கு போய் என்னிடம் வந்திருந்தது.
சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு ஆண்களுக்கும் சைக்கிள் பழக்க என மாமாவோ, ஆசை மச்சான் என அழைக்கப்படும் ஒருவனோ, சின்னண்ணா என கூப்பிடும் ஒருவனோ இருப்பான்,
'கிருத்திகன் வளரட்டும் பிறகு சைக்கிள் பழகலாம்' என அம்மா சொல்லிவிட்டதாலும் எனக்கு சைக்கிள் பழக்க யாரும் முன்வராத்தாலும் சைக்கிளை அது வைத்திருந்த இடத்திலேயே ஏறி இருந்து பெடலை பின்புறமாக உழக்க ஆரம்பித்ததை கண்ட அப்பா அந்த சொப்பர் சைக்கிளை சைக்கிள் கடைக்காரரிடம் எடுத்து சென்றார்.
அதற்கு ஒட்டி காற்று அடித்து, உதிரி பாகங்களை பிரித்து, சில்லுக்கு பக்கிள் பார்த்து, மண்ணெண்ணையில் பாகங்களை கழுவி, போல்ஸ் மாத்தி, உடைந்தகம்பிகளை ரீப்ப்பளேஸ் செய்து, கிரீஸ் வைத்து, பிரேக் கட்டை புதுசு போட்டு, ஒருவாரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தது சொப்பர் சைக்கிள்.
படிக்கும்போதே மூச்சுவாங்கும் ஒருவாரம் நீடிக்கக்கூடிய இந்த செயன்முறையை யாழ்ப்பாணத்தில் ஒரேவார்த்தையில் 'கழுவிப்பூட்டுறது' என்று சொல்லி முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்க போய்விடுவார்கள்.
சைக்கிள் கடைக்கு சைக்கிளை கழுவிப்பூட்ட குடுக்கும் போது மாணவர்கள் பாடசாலை தவணை விடுமுறை நாட்களிலும், உத்தியோகத்தர்கள் லீவுகாலங்களிலும் சைக்கிளை அனுப்பிவைப்பர்,
ஏனெனில் சைக்கிள் கடையில் ஏற்கனவே கழுவிப்பூட்ட என பத்து சைக்கிள் வரிசையில் நிற்கும் இன்னும் ஐந்து சைக்கிள் பாகங்களை கழட்டி போட்டபடி பல்லிழித்துக்கொண்டிலுக்கும்.
பாகங்களை கழட்டிவிட்டு என்னென்ன தேவை என சைக்கிள் கடைக்காரர் ஒரு பேப்பரில் எழுதித்தர அதை நாம் வாங்கி கொடுத்ததும் சைக்கிள் பூட்டப்படும்.
இப்படி வந்து சேர்ந்த சொப்பர் சைக்கிளை ஓடத்தெரியாததால் உருட்டியபடியே ஒழுங்கையில் திரிவேன்.
இதுவே லீவுநாட்களில் மச்சான், மச்சாள் ஊருக்கு வந்தால் நான் சீட்டில் ஹாண்டிலை பிடித்தபடி இருக்க அவர்கள் இருவர் என்னை வைத்து தள்ளியபடி எங்கள் வீட்டிலிருந்து ஒழுங்கையில் சிறிது தூரம் வைரவர் கோவில்வரை செல்வர்,
பின்னர் அங்கிருந்து அவர்களில் ஒருவரை இருத்தி தள்ளியபடி நாங்கள் இருவர் வருவோம்.
என் அண்ணன் & கோ தங்களை பெரியாக்களாக கற்பனை செய்து பெரிய லுமாலா சைக்கிள் ஓடியபடி அங்கு சுற்றித்திரிவதால் பழக்க யாருமில்லாமல் இப்படியே எங்கள் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
சைக்கிள் ஓடவேண்டும் என்ற பேராசை இருந்தாலும் கால் எட்டாத காரணத்தால் போகுமிடமெல்லாம் உருட்டியபடியே திரிந்தேன்.
நாங்கள் இருந்தது கோண்டாவில் மேற்கு, கோவில்களுக்கு பஞ்சம் இல்லாத ஊர்.
ஒருநாள் தூக்கத்தில் நான் சைக்கிள் ஓட்டி செல்வதுபோல கனவுவந்தது, அன்று காலை வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்றுவிட்டிருந்தனர்.
சைக்கிளை உருட்டியபடி ஒழுங்கைக்கு வந்து கல்ஒன்றின் மீது ஏறி சைக்கிளில் அமர்ந்து கல்லை காலால் உண்ணி அங்குமிங்கும் திரும்பியபடி புறப்பட்ட ஹாண்டிலை நேராக்கி பெடலை விளக்க ஆரம்பமானது என் முதல் பயணம்.
நேராக நல்லாத்தான் போகுது சந்தியில் பாதை வளைவுக்கேற்ப திருப்பவேண்டிய இடத்தில் சடுதியாக திருப்ப..!
சடார்!
முதல் விபத்து.
எதுவுமே ஆகவில்லை யாரும் வருவதற்குள் சைக்கிளை நிமிர்த்தி திருப்பி உருட்டி வந்து அதே கல்லுக்கு மேல் ஏறி மீண்டும் பயணம், இம்முறை அதிக தூரம் நோ விபத்து,
என்ன ஒன்று நிறுத்தும் போது தான் மரத்திலோ, மதிலிலோ இடித்துவிட்டு சைக்கிள் ஒருபுறம் சரிய நான் அதற்கு முன் மறுபுறம் குதிக்கவேண்டியிருந்தது.
இத்தனைக்கும் அது எனக்காக கழுவிப்பூட்டும்போது மக்ஸிம்ம் சீட் பதித்து செட் பண்ணப்பட்ட சைக்கிள்.
நான் சைக்கிள் ஓடுவேன் என்பது சில நாட்களின் பின்னர் அயலவர்கள் சொல்லியே வீட்டில் தெரியவந்தது,
நான் எதிர்பார்த்தபடி பேச்சு எதுவும் விழவில்லை.
சைக்கிள் ஓடுவதற்காகவே மாலை நேரங்களில் பாண்வாங்க நான் போகிறேன் என அடம்பிடித்தேன் சிலநாட்களிலேயே அருகிலிருக்கும் கடைக்கு போய்வர அனுமதித்தார்கள்.
பாடசாலை செல்வது அப்பாவோடு அல்லது அண்ணாவோடு சைக்கிளில் முன் பாரில் இருந்தபடி ஆகும்.
கோண்டாவிலிலிருந்து யாழ் இந்து ஆரம்ப பாடசாலை செல்லும் பலாலி வீதி பாதையில் டிப்போ காம்ப் இராணுவ சோதனை சாவடியும், கேகேஎஸ் வீதியில் இணுவில், தாவடி தட்டாதெரு காம்ப்உம் இருக்கும்.
அதில் சோதனையிடப்பட்ட பின்னரே அனைவரும் யாழ்ப்பாணம் ரவுணுக்குள் நுளையமுடியும். இவை ஒருவழிப்பாதைகள் திரும்பி வருவதற்கு கலட்டி காம்ப் சோதனை சாவடியை கடக்க வேண்டும்.
ஏனய பாதைகள் அனைத்தும் முள்வேலியால் மூடி மிதிவெடிகள் புதைத்து புதர்நிறைந்து காணப்படும்.
அவற்றுக்கருகில் எப்போதோ ஒருகாலை இழந்த மாடுகள் புல்மேய்ந்தபடி இருக்கும்.
தட்டாதெரு சோதனை சாவடியில் நான்கு முள்வேலி ஒற்றையடி பாதைகள் காணப்படும் நடுவில் நான்கு சில்லு வாகனங்கள் போக பெரிய பாதை இருக்கும்.
முதலாவது பாதை பாடசாலை மாணவருக்கானது, இரண்டாவது அரசாங்க வேலை செய்யும் ஆண்களுக்கனது, மூன்றவது தனியார் வேலை செய்வோர் மற்றும் ஏனய ஆண்களுக்கனது.
மறுபக்கம் மாணவிகளுக்கன பாதையும், ஏனய பெண்களுக்கான பாதையும் இருக்கும்.
இதனூடக பயணித்து உடற்சோதனை முடித்து வெளியேறி நம் அன்றாட கருமங்களை கவனிக்க வேண்டும்.
இதில் மாணவர்களுக்கான பாதை விரைவாகவும், தனியார் வேலை மற்றும் ஏனயோருக்கன பாதை மிக மந்தமாகவும் சோதனை செய்யப்படும்.
தட்டாதெரு காம்பின் சோதனைக்காக காத்திருக்கும் வாகனங்களின் தொடர் தற்போது திருமணமண்டபம் அமைந்திருக்கும் இடத்தை தாண்டி வரிசையில் காத்திருக்கும்,
பஸ்ஸில் வரும் பயணிகள் அந்தந்த பாதைகளில் இறங்கி நடக்க பஸ் வாகனங்களின் வரிசையில் வந்து சோதனை முடித்து ஒருமணிநேரம் கழித்து ஏற்றி செல்லும்.
கே.கே.எஸ் வீதியில் காத்திருந்து பஸ்ஸில் ஏறுபவர்களில் இ.போ.ச பஸ்ஸில் பயணிப்பவர்கள் விரைவாகவும், மினி பஸ்ஸில் பயணிப்பவர்கள் கடுமையாகவும் சோதனையிடப்படுவதோடு மினிபஸ் சீட், ஸ்பீக்கர் முதற்கொண்டு பிரித்துமேயப்படும்.
இதில் சீரீப்பியில் வருபவர்கள் பொதுமக்கள் எனவும் மினிபஸ்ஸில் வருபவர்கள் குண்டு கொண்டு வருபவர்கள் என யாரோ ஒரு இராணுவ அதிகாரி ஏனய சிப்பாய்களுக்கு சூழுரைத்து கட்டளையிட்டிருக்கக்கூடும்.
வாகனங்களின் கீழ் சில்லில் கண்ணாடி பொருத்திய வண்டில் அனுப்பப்பட்டு சோதனையிடப்படும்.
இதனால் அண்ணாவோடு சைக்கிளில் பாடசாலை வரும் என்னை நாச்சிமார் கோவிலடியில் காத்திருக்கும் கூட்டத்திலொருவர் மறித்து தங்கள் சைக்கிளில் ஏற்றி பாடசாலை மாணவர்களுக்கான பாதையால் வந்து ஒருமணி நேரத்தை மிச்சப்படுத்துவார்கள்.
காம்ப் தாண்டியதும் குகானந்தபவன் கடையில் ரொஃபி வாங்கி தந்து பாடசாலையில் இறக்கி விடுவதோடு மறுநாளுக்கும் புக் செய்துவிட்டு செல்வர்.
பெண்களை சோதனைசெய்ய 'ஆமிப்பெட்டையள்' எனப்படும் மகளிர் இராணுவம் கடமையில் இருக்கும்.
தட்டாதெரு காம்பில் இருக்கும் அரசமரத்தடியில் இராணுவத்தினர் சிறிய புத்தர் கோவில் வைத்து வணங்கியதோடு அருகில் அவர்கள் வளர்க்கும் குரங்கு ஒன்றும் கட்டப்பட்டிருக்கும்.
அதற்கு முன்னர் புலிகளின் யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி கிட்டு யாழ்ப்பாணத்தில் தன்னுடன் குரங்கு ஒன்று வளர்த்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால் உண்மையிலேயே பாவப்பட்ட ஜீவன்கள் தட்டாதெரு காம்பில் சோதனை செய்யும் பணியிலிருக்கும் ஆமிக்காரன் தான்.
ஏனெனில் அத்தனை ஐட்டங்களையும் உடலில் அணிந்து சப்பாத்து, சட்டித்தொப்பி, ஜட்டி, பெனியன், ரீசேட், சேட், ஜீன்ஸ் அணிந்து பாரமான துப்பாக்கியையும் ஏந்தியபடி, க்ரினைட் குண்டு, துவக்கு சன்ன மகசீன் செய்ன் கொழுவி, வெய்யிலில் வியர்வை வழிய நின்றபடியே பணிபுரிவதால் அல்ல!
தினமும் ஆயிரக்கணக்கான ஆண்களின் அந்தரங்க உறுப்புகளை தடவிப்பார்த்து 'இரண்டு குண்டும் பத்திரமாக இருக்கா' என சோதனையிடுவதாலாகும்.
இங்கு சைக்கிளின் ஹெட்லைட் கூட கழட்டி பார்த்துவிட்டு தான் அனுப்புவர்.
சந்தைக்கு போகும் ஆச்சியின் கூடையிலிருக்கும் மரக்கறிகள் இரும்பு கம்பியால் குத்தி குத்தி பார்க்கப்படும்.
அந்த காய்கறிகள் அடுத்த சிலமணிநேரத்தில் விற்பனையாகி யார்வீட்டிலாவது சமைத்து உண்டுகொண்டிருக்கும் அதே வேளை மறுபுறம் அந்த இராணுவ சிப்பாயின் கையிலிருக்கும் இரும்புக்கம்பி அங்கு சோதனைக்காக நின்றிருக்கும் குப்பைவண்டியை கிளறிக்கொண்டிருக்கும்.
ஒருதடவை எங்கள் பள்ளியில் கோழிச்சாயம் கொண்டுவரச்சொல்லியிருந்தனர்.
அதை நீரில் கரைத்து துண்டாக வெட்டிய வெண்டக்காய், வாழைத்தண்டு, எவர்க்ரீன் இலை, பூக்கள் என்பவற்றை தோய்த்து சித்திரக்கொப்பியில் கலர் கலராக அச்சு பதிக்க வேண்டும்.
பள்ளியில் அச்சு பதித்து முடிந்ததும் கோழிச்சாயம் நிரம்பிய நீரை எறிய சொன்னார்கள்,
பக்கத்து வீட்ல ரெண்டு கோழிக்குஞ்சு நிக்குது தானே அதுக்கு இத அடிச்சு கலரமாத்திப்பாப்பம் என்ற சிந்தனை என் சிறுமூளையில் உதிக்க அதை பொலித்தீன் பையில் இறுக கட்டி புத்தக பையில் வைத்திருந்தேன்,
போதாக்குறைக்கு என்னை விட இன்னும் மூன்று நிறங்கள் அதிகமாக கொண்டுவந்த க்ளாஸ்மேட் ஒருத்தியும் என்திட்டத்தை கூர்ந்து கேட்டுவிட்டு தன்னுடையதையும் தந்திருந்தாள்.
அச்சு பதிக்கும் போது எனது விரலில் துளித்துளியாக சிறிது சாயம்பட்டிருந்தது.
பள்ளி விட்டு திரும்பிவந்தபோது 'கலட்டி காம்ப் ஆமிக்காறன்' சோதனையிடுவதற்காக பையினுள் எட்டி பார்த்தபடி கைய விட்டது மட்டும் தான் தெரியும்.
எவ்வளவு தேச்சு கழுவியும் எனது விரலில் பட்ட நிறச்சாயம் போகவே ஒருவாரத்துக்கு மேல் ஆனது.
அந்த சமயங்களில் சைக்கிள் ஹெட்லைட்டுக்கு மஞ்சள் துணி கட்டி,
சைக்கிள் பாருக்கு கதிரை பின்னும் வயரை சுற்றி,
சைக்கிள் கம்பிகளில் கலர் கலராக பிளாஸ்டிக் பூக்களை கட்டி,
சீட்'க்கு டெய்லர் கடையில் கவர்தைத்து,
இரும்பு கம்பியை நீக்கிவிட்டு சில்வர் கம்பி போட்டு,
மக்காட் நிறைய ரிஃபிளக்டர்கள் பூட்டி
சைக்கிளில் திரிவோர் கொளரவமாக கருதப்பட்டனர்.
விலையுயர்ந்த குடம் மாற்றி கியர் சைக்கிளில் 'டிக்கி டிக்கி'என சத்தம் போட்டபடி தெருவால் போவோரை வீதிக்கு வந்து பெருமையாக பார்த்தது சனம்.
எங்கள் வீட்டுக்கருகில் இருந்த அண்ணனின் நண்பர் சுரேன் என்பவர் சைக்கிளுக்கு எதையாவது புதுமையாக செய்து ஓடித்திரிவார்.
அதில் ஒன்று பிரேக் கட்டையில் வயரை செட் செய்து டைனமோவை ஓடவிட்டு மற்ற வயரை லைட்டிக்கு கனக்ஷன் கொடுத்தால் சைக்கிள் பிரேக் அடிக்கும் நேரத்தில் லைட் எரியும்.
இதில் இரும்பு சைக்கிள் ஒரு மின்கடத்தியாக செயல்படும்.
ரிஃபிளக்டர்களினுள் எல்ஈடி பல்ப் வைத்து வயரிங் செய்தால் இரவுகளில் வேற லெவல்ல இருக்கும்,
பனைஓலையை சைக்கிள் போக்கில் கட்டி சில்லு கம்பியில் படுமாறு செட் செய்தால் கியர் குடம் பூட்டாமலே ஓடும்போது 'டிக்கி டிக்கி' என சத்தம்வரும்.
பின் மக்காட்டுக்கும் கீழே ஒரு கம்பியை வளைத்து பூட்டி அதில் விளையாட்டு காரின் சில்லை போருத்தி சைக்கிள் சில்லோடு முட்டுமாறு செட்செய்தால் சைக்கிள் ஓடும்போது இந்த சில்லும் கடிகாரத்தின் பற்சில்லு போல மறுபுறம் சுற்றும்.
அதில் ஏதாவது பொம்மையை ஒட்டிவிட்டால் சைக்கிள் ஓடிம்போது பொம்மை சுற்றுவது பின்னால் வருபவருக்கு தெரியும்.
இந்த நடவடிக்கையின் பயனானது நமக்கு பின்னால் வீதியில் வருபவர் என்டர்டெய்ன் செய்யப்படுவார்.
சைக்கிளின் சேறு தாங்கியில் ப்ளேட்டால் டிசைன் வெட்டுவார்கள்.
சீட்டை தாங்கியுள்ள பாரில் பழைய மோட்டார் சைக்கிள் செய்னை கீடெக் வளையத்தில் கனக்ட் செய்து உள்புறமாக இளைஞர்கள் தொங்கவிட்டிருப்பார்கள்,
'ஆரும் சண்டித்தனம் விட்டா உடன எடுத்து விளாசலாம்'
இந்த நடவடிக்கையில் சைக்கிள் உள்ளூர் அடிபாடுகளின்போது ஆயுதகளஞ்சியமாக பயன்படும்.
சீட்டிலிருந்து பெடலுக்கு போகும் பாரில் கறுப்பு நிற வளைந்த கைபிடி போட்ட குடையை செருகி வைத்திருப்பார்கள்.
சைக்கிள் பாருக்கு பட்டண் வைத்த கவர் அணிவித்திலுப்பார்கள்.
புது சைக்கிள் வாங்கும் போது வரும் பெல்லை கழட்டிவிட்டு இரண்டு மூடி கொண்ட 'க்ளிங் க்ளிங்' பெல்லை மாட்டுவார்கள்.
இதன் மூடியை மட்டும் களவெடுக்கவெனவே கோயில்கள், விளையாட்டிடங்களில் ஒரு கூட்டம் இருக்கும்.
பெண்களின் 'பெல்' சத்தம் 'ட்ரிங் ட்ரிங்' எனவும் ஆண்களின் பெல்சத்தம் 'ணங்கு ணங்கு' என்றும் கேட்கும்.
ஸ்பிரிங் போல இருக்கும் பிளாஸ்டிக் கீடெக் தான் ஒவ்வொரு நிறங்களில் பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள்.
பக்தி மான்கள் கடவுள் படம் போட்ட கீட்டெக்,
அப்பாவியான சிலர் நடிகர்களின் முகம் போட்ட கீடெக்,
மன்மத குஞ்சுகள் இதய உருவிலன கீட்டெக்,
கிரியேட்டிவ்வான சிலர் உடைந்த வால்ப்பிளேட்டில் சிறிய கத்தி செய்து சாணை பிடித்து நுண்ணிய மரப்பிடி போட்டு வைத்திருப்பார்கள்.
எனது கீட்டெக்கில் சிறிய பொம்மைகள், டிக்கி டிக்கி தவளை,
சிறிய கத்தி போன்றவை காலத்துக்கு காலம் இருந்தது.
அப்போதெல்லாம் மற்றவர்களின் கீட்டெக்கை ஆராய்ந்து பார்க்கவும் அது பற்றி பேசிக்கொள்ளவும் எமக்கு நேரம் இருந்தது.
என் அப்பாவின் சைக்கிளில் நாம் சிறுவயதில் இருந்தபோது பாரில் பலகையாலான சீட் பொருத்தப்பட்டு அதில் உக்காரவைத்து செல்வார்.
குடும்பமாக சைக்கிளில் போகும்போது ஹான்டிலில் நானும், முன் பாரில் அண்ணாவும், சீட்டில் அப்பாவும் கரியலில் அம்மாவும் போனதாக ஞாபகம்.
நாலுபேர் ஏறி இருந்தாலும் நன்றாகவே சைக்கிள் ஓடுவார். என்ன ஒன்று யாரேனும் குறுக்கே வரும் சந்தர்ப்பத்தில் பிரேக் பிடித்தால் தான், பிரேக்ஐ விடும்போது ஹான்டிலில் இருக்கும் எனது டிக்கி பதம் பார்க்கப்படும்.
தினமும் காலை சைக்கிள் ஹாண்டிலில் செம்பரத்தம் (செவ் இரத்த) பூ வைக்கும் பழக்கம் அவருக்கு உண்டு, எங்கள் சைக்கிளிலும் வைத்து விடுவார், எமக்கு அது ஒரு பொருட்டாக தெரியாவிட்டாலும் பாடசாலை, ட்யூஷனில் அதைப்பற்றி கேட்பார்கள்.
விவசாயிகளின் சைக்கிளில் பெரிய கரியல் பொருத்தப்பட்டு அதில் நைலோன் கயிறு சுற்றப்பட்டிருக்கும்.
விறகு வியாபாரிகளின் கரியலில் மேல் நோக்கி நான்கு தடி கட்டப்பட்டிருக்கும்.
மீன்வியாபாரிகளின் கரியலில் மரப்பெட்டி கட்டப்பட்டிருக்கும். ஹாண்டிலில் ஹோண் கட்டியிருக்கும் நைலோன் பை தொங்கும்.
இளம் தாய்மாரின் லேடிஸ் சைக்கிளின் சீட்டின் பின் குழந்தைகளை உட்கார வைக்கக்கூடிய வயரால் பின்னிய பாஸ்கட் இருக்கும்.
இரண்டு கிலோமீட்டருக்கொரு இடத்தில் 'காற்று அடித்து விட 2/=' என கறுப்பு பெய்ண்டால் எழுதியிருப்பார்கள்.
யாழ்ப்பாணத்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வாழ தேவையான சாமான்களும் சைக்கிளிலேயே பயணித்தது.
இந்த காலத்தில் பாவித்து முடிந்த சைக்கிளின் சில்லையும் போக்கையும் தலைகீழாக ஒரு பலகையில் பொருத்தி டைனமோவை பொருத்தி ஒருவர் காலால் அல்லது கையால் சுழற்ற அந்த மின்சாரத்தில் நான்கைந்துபேர் கூடியிருந்து ரேடியோ கேட்பார்கள், ப்ளக் & வைட் டிவி பார்ப்பார்கள்.
பின்னர் 98ல் மின்சாரம் முதலில் ரவுணுக்கும் பின்னர் ஊர் பக்கமும் வந்தது.
எனக்கு சொப்பர் சைக்கிளில் டபிள் ஏத்த பழக்கியவரும் மேலே சொன்ன சுரேன் என்பவர் தான்.
அண்ணாவோடு சைக்கிளில் ஸ்கூல் போவதால் பாரிலிருந்து ஒத்தாசையாக பெடல் போடவேண்டி இருக்கும்.
சொப்பர் சைக்கிள் காலம் முடிய லேடிஸ் சைக்கிளயும் சீட்டில் இருக்காமல் நின்றபடி ஓடித்திரிந்தேன்,
ஆனால் ஏழாம் ஆண்டில் ஏற்கனவே அண்ணா ஓடிய இன்னோரு சைக்கிள் எனக்காக கழுவிப்பூட்டப்பட்டது.
அதன் உயரம் சராசரி மனிதனின் இடுப்பளவு வரும் நீல நிறம். அது சிறுவர்களுக்கான துவச்சக்கரவண்டி.
நிரு ட்டியூஷனில் வேகமாக ஓடிவந்து புழுதி பறக்க ஹாண்டிலை திருப்பி ப்ரேக் அடிப்பது,
கல்லில் முட்டி முன்சில்லை தூக்குவது,
கையை விட்டுட்டு ஓடுறது என பல சாகசங்களை நிகழ்தியது அந்த சைக்கிள். இது எட்டாமாண்டுவரை என்னோடிருந்தது.
இங்கு நான் எழுதும் சில சொற்கள் யாழ்ப்பாணத்தில் சிறுவயதை கழிக்காத பலருக்கு புரியாது என நினைக்கிறேன் மன்னிக்கவும்.
வேறு மாவட்டங்களில் வளர்ந்தவர்கள் தற்போது படப்பிடிப்புகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட தெரியாமல் திரைக்கதையை மாற்றச்சொல்லி கெஞ்சுவதை கண்டிருக்கிறேன்.
அப்போது லுமாலா என்ற ப்ராண்ட் சைக்கிள் மட்டுமே 96% பாவனையிலிருக்கும், எப்போதாவது ஹீரோ என்ற ப்ராண்ட் சைக்கிள் தென்படும்.
றலிச் சைக்கிள் வைத்திருப்போர் பண்ணும் அலப்பறையில் செவிப்பறை கிழியும்.
'கிடத்திவச்சு ஆமிண்ட செயின்புளக் ஏறிப்போனா கூட றலிச்சைக்கிள் பக்கிளே அடிக்காம எழும்பி ஓடும்' என்பார்கள்.
என் அண்ணன் பாடசாலை காலத்தில் மட்டும் ஆறு சைக்கிள்களை களவு கொடுத்திருக்கிறான் என்பது அம்மாவின் டேட்டாபேஸ்.
அப்போது களவு போனால் சைக்கிளுக்கும் இஞ்சின் நம்பர் செசி நம்பர் போல் ஒரு சீரியல் நம்பர் இருக்கும் அதை பொலிஸ் முறைப்பாட்டில் கொடுத்துவிட்டால் போதும்.
அவர்கள் எழுதி வைத்துக்கொள்வார்கள்.
ஒன்பதாமாண்டில் பாதை திறந்து மவுண்டன் சைக்கிள், ஜப்பான் சைக்கிள் என்பவை யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்திருந்தன.
சஞ்சீவன் என்ற என் நண்பன் மவுண்டன் பைக் வாங்க நானும் அதை வாங்கி தருமாறு வீட்டில் கேட்டிருந்தேன்.
சைக்கிள் விசயத்தில் எங்கள் குடும்ப மெக்கானிக் வரதன் சொல்வதே வேதவாக்கு.
புது சைக்கிள் வாங்குவோர் மெக்கானிக்கை கடைக்கு கூட்டிப்போய் காட்டி அவர் தலையாட்டினால் மட்டுமே வாங்குவார்கள்.
'மவுண்டன் பைக் பெருசா பாவிக்காது, ஜப்பான் சைக்கிள் கொஞ்சம் பாவிக்கும்' என அவர் சொல்ல அடுத்த ஆண்டு புது சைக்கிள் வாங்கித்தருவதாக வீட்டில் உறுதியளிக்கப்பட்டது.
பாடசாலை காலத்தில் யாழ்ப்பாணத்தில் வளர்பவர்கள் புது சைக்கிள் வாங்கவேண்டுமானால் ஆசைப்பட்டாலோ, காசிருந்தாலோ முடியாது.
அதற்காக ஸ்கொலர்ஷிப் பாஸ் செய்ய வேண்டும்,
அல்லது வகுப்பில் முதலாம் பிள்ளையாக வரவேண்டும்,
அல்லது 'தம்பிய ஏத்திட்டு ஸ்கூல் போய்வர நெஞ்சு நோகுது, அல்சர் வரப்போகுது, இத அவனிட்ட குடுத்திட்டு எனக்கு புதுசு வாங்கித்தாங்கோ' என்று கேட்க வேண்டும்,
(சைக்கிள்ள போறதுக்கும் அல்சருக்கும் நெஞ்சுக்கும் சம்பந்தமேயில்ல எண்டது சொல்றவருக்கும் தெரியாது, அத ஓமெண்டு கேக்கிறவருக்கும் தெரியாது)
அல்லது 'இயக்கத்துக்கு போவன்' என்று வெருட்ட வேண்டும்.
எட்டாமாண்டில் திட்டமிட்டபடி ஒன்பதாமாண்டில் எனக்கு ஜப்பான் சைக்கிள் வாங்கி தந்தார்கள்.
அது கறுப்பு நிறம், ஆறு கியர் கொண்டது, ஒருவர் மட்டுமே பயணிக்கலாம்.
ட்யூஷனிலும் பாடசாலையிலும் இது புது மொடல் சைக்கிளாக இருந்ததால் நண்பர்கள் எப்போதும் இதை வாங்கி ஓட பிரியப்படுவார்கள்.
ஊர்சுற்றும் நேரங்களில் யாரேனும் ஒருவன் என் சைக்கிளை வாங்கிக்கொள்வான், அதில் ஒருவரே பயணிக்க முடியுமென்பதால் இன்னொருவனுடன் நான் உக்கார்ந்து போவேன்.
வரும்போது என்னை ஏற்றிச்சென்றவன் என் சைக்கிளில் ஓடி வர முதலில் சைக்கிளை வாங்கியவன் இப்போது நண்பனின் சைக்கிளில் என்னை ஏற்றி வருவான். (இந்த சிஸ்டம் புரியும்னு நம்புறேன்)
இப்போதும் நான் சும்மா உக்கார்ந்து தான் வருவேன்.
இப்படி சைக்கிளிலேயே கசூரினா பீச், சாட்டி பீச் என ஸ்கூலை கட் அடித்துவிட்டு ஐந்தாறு பேர் சேர்ந்து முப்பது கிலோமீட்டர் வரை கூட பயணிப்போம்.
ஜப்பான் சைக்கிள் ஏ/எல் வரை என் பாதை பயணங்களில் இருந்தது பின்னர் மச்சான் அதை வாங்கிக்கொள்ள அண்ணா ஓடிய லுமாலா ஜென்ஸ் சைக்கிளை நான் எடுத்துக்பொண்டேன்.
இந்த சைக்கிளில் முன் ஹாண்டிலில் அண்ணன் கரியல் போன்ற ஒன்றை வாங்கி பொருத்தியிருந்தான்.
அதிலேயே கொப்பி, கொம்பாஸ், குடை வைத்திருப்போம்.
சப்போஸ் போக் உடைந்தால் பல்லு உடையாமல் இருக்க என அதில் எக்ஸ்ரா ஷொக்ஒஃப்ஷோபர் பொருத்தப்பட்டிருந்தது.
சைக்கிளை பொறுத்தவரை விபத்து என்பது கோரமானதாக இருக்காது யாராவது விழுந்தால் மற்றவர்களை விட விழுந்தவனே விழுந்து விழுந்து சிரிப்பான், மிஞ்சிப்போனால் முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கும் அவ்வளவு தான்.
எங்களோடு பத்தாமாண்டில் ராஜா ட்யூஷனில் படித்த லோகேஷ் என்பவன் முன்பிரேக் அடிப்பதே ஆண்மைக்கு அழகு என நினைத்துக்கொண்டிருப்பவன்.
அவனுக்கு பெண்கள் தன்னை பார்த்து சிரிக்கவேண்டும் என்ற அடிமனது ஆவல் ஏற்படவே
ஒரு தடவை கூட படித்த பெண்களுக்கு சம்பியன் லேன் வீதியில் சைக்கிளில் சாகசம் காட்டி கரக்ட் பண்ண போய் வினோஜா என்பவளின் சைக்கிளுக்கருகில் வேகமாக போய் முன்பிரேக் அடிக்க,
முன்சில்லு கழன்டு தனிய போய் ஒரு வீட்டின் வேலிக்குள்ளால் புகுந்துவிட...
இவன் கையோட கழண்டு வந்த சைக்கிள் ஹாட்டிலை இறுக பிடித்தபடி வீதியில் தவள...
பின்சில்லுடன் கூடிய பார் மட்டும் இவன் கட்டளைக்கு பணிந்து பிரேக் அடித்த இடத்திலேயே நின்றிருந்தது.
ட்யூஷன் முடிந்து சைக்கிள் நிற்கும் இடத்திற்கு வந்தால் கண்டிப்பான வாத்திமாரின் சைக்கிள் டயர் குளப்படி மாணவனின் ஆக்'கால் பஞ்சராக்கப்பட்டிருக்கும்.
அழகான பெண்களின் சைக்கிள் முன் பாஸ்கட் சக மாணவனின் காதல் கடிதத்தால் அஞ்சல் பெட்டியாகியிருக்கும்.
பெண்களின் பாவாடை சைக்கிள் சில்லுக்குள் சுற்றிக்கொண்டால் துரித நடவடிக்கை மேற்கொண்டு உதவிட சம்பவ இடத்திற்கு அடுத்த வீட்டு அங்கிளும்,
பெண்களில் சைக்கிள் செயன் கழன்றால் பூட்டிவிட வீதியிலே ஒரு உடன்பிறவா அண்ணனும்,
பெண்களுக்கு எப்போதுமே காற்று அடித்துவிட யாரேனும் ஒரு இழிச்ச வாயனும் இருப்பார்கள்.
சந்தியில் அல்லது விபத்தை தடுக்க சடுதியாக இரண்டு பிரேக்கையும் பிடித்தால் 'கீ...' என்ற சத்தத்துடன் அமர்முடுகி சைக்கிள் நிற்கும்.
லேடிஸ் சைக்கிளிலிருந்தும் 'கீ....' என்ற சத்தம் வரும் ஆனால் பெண்கள் பிரேக் பயன்படுத்துவதில்லை.
அந்த சத்தம் அவர்கள் வாயிலிருந்து வரும்.
மாணவர்கள் வீதியில் போகும் போது அவர்களது வலது கை அருகில் வருபவனின் சைக்கிளின் ஹான்டிலிலேயே இருக்கும்.
மாணவிகள் சேர்ந்து எங்காவது அருகில் போகும்போது சைக்கிளை உருட்டியபடியே ஜூஸ் குடித்தபடி செல்வர்.
காற்று வீசும் காலங்களில் பெண்களின் சைக்கிள் பயணத்தின் போது எதிரில் வரும் நபருக்கு சில அரிய காட்சிகளை காணும் அதிஷ்ட வாய்ப்புகள் கிடைப்பதுண்டு,
பெண்களும் அதை பெருசா எடுத்துக்கொள்ளாமல் 'ஜஸ்ட் லைக் தட்' என வெட்கப்பட்டு சிரித்துவிட்டு போய்விடுவர்.
குண்டும் குழியுமான ஒழுங்கையில் குலுங்கியபடி வந்து கொண்டிருந்த லேடிஸ் சைக்கிளை நிமிர்ந்து பார்த்த.... வேண்டாம் நீங்கள் வாசிப்பதை நிறுத்தி விட்டு இளஞ்சிவப்பு நிற ரீசேட் போட்ட டீனேஜ் பெண்ணை நினைக்க ஆரம்பித்து விட்டதால் அடுத்த பந்திக்கு போகலாம்.
ஏன்னா அந்த பொண்ணு இப்ப ஸ்கூலால வரப்போற தன்ர பிள்ளைக்காக சமைச்சு கொண்டிருக்கக்கூடும்.
கவனம் இப்போது நீங்கள் அசடு வழிந்தபடி உங்களை நினைத்து சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து மற்றவர்கள் விசாரிக்க போகிறார்கள்.
அதோட சைக்கிளை 'சாக்கிள் சாக்கிள்' என்று சொல்லும் ஒரு நண்பன் உங்களோடு படித்தான். ஆனால் அவன் பெயர் இப்போது ஞாபகத்திலில்லை.
மரநிழல் சூழ்ந்த வளைவான ஒழுங்கைகளில் ஒரு ஜென்ஸ் சைக்கிளும் லேடிஸ் சைக்கிளும் அருகருகே நின்றுகொண்டிருக்குமானால் அதுவே அன்றய அதிக பட்ச காதல்.
இப்படி நின்று பேசிக்கொண்டிருப்பவர்கள் அந்த ஏரியா காதலர்களாக இருக்கமட்டார்கள், அடுத்த ஊரிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வழிப்போக்கர் போல வந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு(!) போவார்கள்.
இதை பார்த்து கூ அடிக்கவென இரண்டு சைக்கிள் குறுக்க மறுக்க போய்வரும்.
'ஆர்ர பெட்டயெண்டு பாப்பம்' என அடுத்த வீட்டு அன்ரி ஆடு ஒன்றை கொறை இழுவை இழுத்துக்கொண்டு அது வழியாக வருவா. (தான் ஆடு தான் மேய்க்கிறாவாம்)
ஆடு பாவம் 'ஏனுந்த மனுசி சிவனே எண்டு படுத்திருந்த என்ன கழுத்துல கயிறு இறுக்க இறுக்க புல்லே இல்லாத பக்கமா எங்க கொண்டு போகுது?' என நாக்கு தள்ள முழுசிய படி இழுபடும்.
கலர் (ஜப்பான்) லேடிஸ் சைக்கிள்கள் இன்னொரு ஜென்ஸ் சைக்கிள் அருகே நின்று கொண்டிருக்காது.
அதனருகே 100 சிசி மோட்டார் சைக்கிளில் ஒரு ஸ்டைலான இளைஞன் நின்றுகொண்டிருப்பான்.
அடுத்த மாதம் 150 சிசி மோட்டார் சைக்கிளில் வேறொரு இளைஞன் நின்றுகொண்டிருப்பான்.
அந்த பெண் சில வருடங்களில் வெளிநாட்டுக்கு திருமணமாகி போனபின் முதலிரவில் ஏன் இரத்தம் வரவில்லை என மாப்பிளைக்கு சந்தேகம் வந்தால் அந்த பழியை ஏற்பதும் அந்த பாவப்பட்ட கலர் லேடிஸ் சைக்கிள் தான்.
எங்களோடு படித்த பஞ்சு என்கிற நிரோசன் ஆமி ஐசி'க்கு போட்டோ எடுக்கும் போதே இன்ஸ்ராக்ராமில் பெண்கள் செல்ஃபி எடுக்கும் போது முகத்தை கோணலாக வைத்துக்கொள்வது போல தற்செயலாக கோணலாக வைத்திருந்துவிட்டான்.
அப்போ பிலிம்ரோல் கழுவிய பிறகு மட்டுமே எடுத்த போட்டோ எப்படி வந்திருக்கிறது என பார்க்க முடியும்.
ஃப்ளாஷ் லைட்டில் கண் மூடியிருந்தால் மட்டுமே ரீட்டேக் எடுப்பார்கள்.
பதினொரு வயதில் (அறியாத வயசு) எடுத்த ஆமி ஐசியை பதினெட்டு வயதில் (அறிஞ்ச வயசு) சைக்கிளை மறித்து ஆமி செக்பண்ணும் போது..
ஹோயத யண்ணே?
வீட்ட சேர் (சிரிச்சுக்கொண்டே சொல்லோணும்)
எங்க வாறது?
ட்யூசன் சேர் (பயந்த மாரி காட்டினா சந்தேகப்பட்டு காம்புக்குள்ள கொண்டுபோய் விசாரிப்பாங்கள்)
எங்க படிக்கிறது?
யாழ் இந்து கல்லூரி சேர். (Jaffna Hindu College எண்டு இங்கிலீசில சொன்னா அவன் ஜட்டியோட இருத்தி வச்சு நோண்டி நோண்டி கேள்வி கேப்பான். இண்டைக்கி விடமாட்டான், தமிழ்ழ சொன்னா விளங்காம விட்டுடுவான்)
ஐசி எடுக்கிறது.
இந்தாங்க சேர்
இவளவு நேரமும் சாதாரணமாக இருந்த முகம் இப்போ ஐசிய பாத்திட்டு ஆமி நிமிர்ந்து இவன் முகத்தை பார்க்கும் போது போட்டோவிலிருப்பது போல கோணலாக வைத்திருப்பான்.
அருகில் நின்றிருக்கும் எங்களுக்கு இதை பார்த்ததும் சிரிப்பு வந்தாலும் 'சிரிச்சா போச்சு' என்பதால் அடக்கிகொண்டு ஆளயாள் பார்த்தபடி நின்றிருப்போம்.
ஆனால் பாவம் சைக்கிள் பயண காலங்களில் யாழ்ப்பாணத்தின் பிரஷர், கொலஸ்ரோல், மருத்துவ பகுதிகள் மட்டும் தேடுவாரற்று வெறிச்சோடியே இருந்தது.
'சைக்கிள் ஓடுவது எப்படி?' என்பதை புத்தகத்தை படித்தோ, யூடியூப்பில் பார்த்தோ பழகமுடியாது என்பது போலவே இந்த கட்டுரையையும் அனுபவபட்டவர்களுக்கு மட்டுமே புரியும்.
இந்த பதிவை படிக்கும் போது எங்காவது சில இடங்களில் உங்கள் நினைவுகளும் மீட்டப்பட்டிருந்தால் சந்தேகமே வேண்டாம் உங்கள் இளமைக்காலம் அழகாகவே இருந்துள்ளது.
இந்த கதைக்கு நீங்கள் தான் ஹீரோ! இந்த பத்தியை ஃபேஸ்புக்கில் கெத்தாக பகிரலாம்.
அல்லது இதைப்படிக்கும் போது 'ஆர்ர செத்தவீடோ ஒண்டும் விளங்கேல்ல' என்று தோன்றினால் ஸாரி நெக்ஸ்டு ஜென்மத்துல கூட நீங்க ட்ரை பண்ண முடியாது, அந்த காலம் இனி திரும்ப வராது.
ஆகவே சாகறதுக்குள்ள யாராவது 'ரைம் மெஷின்' கண்டுபிடிச்சா ஒரு சுற்று போய் பாத்துடுங்கோ!
என் சிறுவயதில் நம் நட்பு.
என் மகிழ்வை, கோபத்தை எல்லாவற்றையும் உங்கள் மீது தான் காண்பித்திருக்கிறேன்.
அத்தனையும் தாங்கிக்கொண்டு என்னுடன் பயணித்திருக்கிறாய்.
நீ வந்த நாள் முதல் என் வாழ்வில் வளர்ச்சியை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.
இன்னும் எத்தனை சிகரங்களை நான் தொட்டாலும் உன்னுடன் பயணித்த நாட்கள் மட்டுமே என் மனதில் அழிக்க முடியாத நினைவுகளாய் நிற்கும்.
Love you so much என் துவிச்சக்கர வண்டிகளே! 😍😍😍. 🚲 எங்கிருந்தாலும் வாழ்க!!!!!!!!!!!!
நெகிழ்ச்சியுடன்
நண்பன் கிருத்திகன்.