Thursday, September 4, 2014

நடுக்காட்டில் ஓர் தங்க வேட்டை - உண்மை சம்பவம்.

இது என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது...

அவரு பேரு சோபி.
ஐடி பணியாளர். 

போதுமான பணப்புக்கம் இருந்தாலும், தேவைகளும் அதிகமாக இருந்ததால் சொந்த பிஸ்னஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலிருப்பவர்.

இவர் உணவகம் ஒன்றில் துறைமுகத்தில் பணிபுரியும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறார்.

அவர்களில் ஒரு சிங்கள பணியாளன், சோபியிடம் யாழ்ப்பாணத்தில் தனக்கு இடங்கள் தெரியாது எனவும் நல்ல சாப்பாட்டு கடை எங்கிருக்கிறது? தங்கிநிற்க நல்ல இடம் எது? எனவும் கேட்டறிய சோபியுடன் உணவருந்தியபடியே சகஜமாக பேச ஆரம்பித்துள்ளான்.

அவரை பற்றி விசாரிக்க தான் பிறிமா மாவு இறக்குமதி பணியாளன் எனவும் தம்புள்ள பகுதியை சேர்ந்தவர் எனவும், இங்கு யாரையும் தெரியாது எனவும் கூறியதுடன், தொலைபேசி எணையும் வாங்கி சென்றார்.

அன்று மாலையே தான் அருகிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிநிற்பதாகவும் ஏடிஎம் எங்கிருக்கிறது என தொலைபேசியில் விசாரித்தார்.

பதிலளித்த சோபி எந்த வங்கி என கேட்க இருவரும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவர தனக்கும் வங்கியில் தேவை இருக்கிறது அங்கு தான் புறப்பட போகிறேன் சேர்ந்தே போவோம் என அருகிலுள்ள அவரது விடுதிக்கு சென்று இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

பேச்சுவாக்கில் இந்த வங்கியில் தங்கம் அடவு எவ்வளவு? நகையாக இல்லாமல் தங்க கட்டியாக வாங்குவார்களா என கேட்டார்.

பதிலுக்கு சோபி வங்கியிலேயே கேட்போமே என கூற யாழ்ப்பாணத்தில் நகை அணிவது தமிழ் கலாசாரம் என்பதால் இங்கு அடகு வைக்க போகிறேன் எமது பகுதியில் ஏன், எதற்கு என கேள்வி கேட்பார்கள் என்றவர்.

தொடர்ந்து தனது உறவினர் தம்புள்ளயில் காணி வாங்கியதாகவும் அதில் வீடுகட்ட அத்திவாரம் வெட்டும் போது தங்கம் கிடைத்ததாகவும் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறினார்.

மேலும் தமது பிரதேசத்தில் விற்க பயமாக உள்ளது என்றும் எப்படியாவது குறைந்த விலைக்காவது விற்க வேண்டும் என்று கடந்த முறை யாழ்ப்பாணம் வந்த போது நல்லூர் உண்டியலில் சிறிது தங்கம் போட்டு வேண்டிக்கொண்டேன் எனவும் கூறினார்.

தற்போது வங்கியை அடைந்திருந்தார்கள். சோபி வங்கிக்குள் நுளைய அந்த நபர் தன் பர்ஸை கையில் எடுத்தபடி ஏடிஎம்ஐ நோக்கி சென்றார்.

மறுநாள் சோபி அவருக்கு போன் செய்து அந்த தங்கத்தை தானே வாங்குவதாயும், நேரில் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார்.

அந்த நபர் தன்வீட்டுக்கு வரும்படி அழைக்க சோபியின் சகோதரனும் இன்னொரு நண்பனும் அவருடன் புறப்பட்டார்கள்.

தம்புள்ளயில் இறங்கி இன்னொரு பஸ் புடித்து உள்ளே சென்றால் மலைக்குன்றுகள் நிறைந்த ஓர் கிராமம்.

அங்கிருந்து ஆட்டோவில் மரங்கள் நிறைநத ஓர் பகுதியை அடைந்து, உள்ளே நடந்து செல்ல புதிதாக காட்டை துப்புரவு செய்து உருவாக்கப்பட்ட பாதை, 

முடிவில் அந்த நபரின் உறவினர் புதிதாக வாங்கிய காணி.

முன்பு மன்னர்கள் யாராவது ஆண்ட பகுதியாயிருக்க கூடும்...!

கட்டட வேலைக்காக பறிக்கப்பட்ட சீமெந்து மூட்டைகள், கட்டட தொழிலாளர்கள் தங்கிநிற்க தற்காலிக கொட்டகை.

அதில் இவரது உறவினர் இருந்தார். இவர்கள் பார்க்க வருவதால் அன்று கட்டட வேலைகளை நிறுத்தியிருப்பதாக கூறினார்கள்.

அருகில் அத்திவாரம் வெட்டியிருந்தார்கள், பணியாளர்களது ஆடைகள் உலர்ந்து கொண்டிருந்தன.

அந்த உறவினர் கொட்டகையிலுள்ள ஓர் வெற்று பெயின்ட் வாளியிலிருந்து ஓர் பார்சலை எடுக்கிறார்,அது சீமெந்து பையால் சுற்றபபட்டிருக்கிறது.

அதை பிரிக்க உள்ளே துணியால் சுற்றப்பட்ட ஏதோவெரு பொருள் அதையும் பிரிக்க உள்ளே செப்பால் செய்யப்பட்ட உள்ளங்கையில் வைக்க கூடிய சிறிய மூடியுடன் செம்பு ஒன்று.

செம்பின் அடியில் மண் ஒட்டியிருக்கிறது.

கொட்டகையினுள் மரக்குற்றிகளாலேயே சிறிய டீப்பாய் போன்றும் அதை சுற்றி அமரகூடியவாறும் அமைத்திருந்தார்கள்.

அந்த டீபாயில் மூடியிருந்த துணியை விரித்து செம்பை கவிழ்த்தார்.

உள்ளேயருந்து தங்கம் கொட்டியது, அது தங்க பிஸ்கட் வடிவிலோ, நாணய வடிவிலோ ஆபரணமாகவே இருக்கவில்லை. தண்ணீர் துளி வடிவில் துகள் துகளாக காணப்பட்டது.

அவற்றை அவர்களை எடுத்து சென்று யாழ்ப்பாணத்துககு போய் பணத்தை தருமாறு கூறினார்.

மேலும் இதற்கு முன்னரும் தமிழர் ஒருவர் வாங்க வந்ததாகவும் இரவு ஷாம்பெய்ன் போத்தலுடன் தங்கிநின்று விருந்து வைத்ததாகவும் காலையில் சொல்லாமலே கிளம்பிவிட்டதாகவும் கூறினார்.

அதனால் தங்கத்துடன் தாம் பணம் வாங்க யாழ்ப்பாணம் வருவது பயமாக உள்ளது எனவும், நீங்கள் சென்று மறுபடி பணத்துடன் வாருங்கள் எனவும் பாதிவிலைக்காவது விற்றால் போதும் என தமக்கு இருப்பாகவும் கூறினார்.

அவர்களிடம் இருந்த சிறிய தராசில் நிறுத்து சமகால தங்கவிலையுடன் கணித்த போது பதினாறு இலட்சம் பெறுமதி இருக்கலாம் என ஊகிக்க முடிந்தது.

நம்மாளுங்க எழுமாறாக சில துகள்களை சாம்பிளுக்காக எடுத்து கொண்டு புறப்பட்டனர்.

அன்று முன்னிரவில் யாழ்ப்பாணத்தை அடைந்தவர்கள் சோபிக்கு சாம்பிள் தங்கத்தை காண்பிக்கவே, இரவேடிரவாக தங்கநகை வேலை செய்பவர்களின் உதவியுடன் பரிசோதித்து பார்க்கப்படுகிறது.

இயந்திர பரிசோதனை முடிவில் அது சுத்த தங்கம் என்பதற்கான ரசீதுடன் சோபி எம்மை சந்தித்து இந்த விடையங்களை கூறியதுடன் மறுநாள் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு தன் சகோதரனும் நண்பர்களும் புறப்பட இருப்பதையும் கூறினார்.

எம் முன்னாலேயே அந்த சிங்கள நபருக்கு போன் செய்து ஐந்து லட்சத்துக்கு தருமாறு கேட்க அவரோ எட்டு லட்சத்துடன் வாருங்கள் இல்லாவிட்டால் வேறு ஆள் பார்க்கிறோம் என கூறி போனை வைத்து விட்டார்.

மறுநாள் சோபியின் சகோதரன் அனுடன் துணிச்சலான நண்பன் ஒருவன் புறப்படுகிறார்கள்.

அவர்களது இடத்துக்கு போவதில்லை எனவும் சனநடமாட்டமுள்ள பகுதியில் வைத்து பணத்துக்கு பொருளை மாற்றுவது என்றும் திட்டமிட்டிருந்தார்கள்.

தம்புள்ளவில் இறங்கி போன் செய்து அவர்களை வரவைத்து, ரெஸ்டாரன்ட் ஒன்றில் பேசிக்கொண்டிருந்துவிட்டு அனைவரும் ஆட்டோ ஒன்றில் ஏறி அருகிலுள்ள வங்கிக்கு சென்று ஆட்டோவில் மற்றவர்கள் காத்திருக்க நம்மாளுங்க உள்ள போயி பணத்துடன் வந்து பணத்தை கொடுக்க அந்த செம்பை கொடுக்கிறார்கள்,

செம்பின் வௌிப்புறம் ஒட்டியிருக்கும் அத்திவார மண்ணை துடைத்து சோபியின் சகோதரன் தங்கத்தை நண்பனின் இருகைகளிலும் கொட்டி சரிபார்த்து மீண்டும் செம்பினுள்ளே கொட்டுகிறான்.

ஆட்டோவில் வைத்து பணத்தை எண்ணுகறார்கள். ஐந்து லட்சம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு பணத்தை மீணடும் கொடுத்துவிட்டு செம்பை வாங்கிவிட்டார்கள்.

நம்மாளுங்க சோபிக்கு போன் செய்து விடையத்தை சொல்ல, மீண்டும் போனில் பேரம் நடக்கிறது. 

அவர்களோ 'உங்களை நம்பி பொருளை கொண்டுவந்தால் இப்படி செய்கிறீர்களே' என கோபமாக கூற, சில நிமிட பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கைகளால் சிறிது தங்கத்தை எடுத்து கொண்டு பணத்தை வாங்கி கொண்டு செம்பை கொடுத்து விடுகிறார்கள்.

இவர்களை பஸ் ஏற்றி பஸ் புறப்படும்வரை காத்திருந்து 'பத்திரமாக போங்கள். போனதும் போன் செய்யுங்கள்' என கூறி அனுப்பிவைத்தாரகள்.

புறப்பட்டவரகள் அடுத்த இரண்டாவது இறக்கத்தில் இறங்கி வேறோர் பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்கிறார்கள்.

ஏனெனில் யாரும் இவர்கள் போகும் வண்டியை கண்காணித்து பொலிசில் மாட்டிவிடாமலிருக்க இந்த ஏற்பாடு.

யாழப்பாணத்தை அடைந்தபோது முன்னிரவு ஆகிவிட்டிருந்தது. இதுவரை இந்த விடையம் வேறு யாருக்கும் தெரியாது.

பஸ் ஸ்டான்டிலேயே காத்திருந்த சோபியிடம் பார்சலைகொடுக்கிறார்கள், பிரபல நகைக்கடை ஒன்றில் பதினைந்து லட்சத்துக்கு இதை வாஙகுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சிலர் காத்திருக்கிறார்கள்.

அருகிலுள்ள வேறு நகை கடை வியாபாரிகள், சந்தேகத்துக்கிடமான ஆசாமிகள், சன நடமாட்டம் என்பன ஓய்ந்ததுமே நகைகடையை திறந்து மற்றவர்கள் உள்ளே போகமுடியும்.

சாதாரணமான கொத்துரொட்டி கடை ஒன்றில் அனைவரும் சாப்பிட்டபடியே நேரத்தை நகர்த்துகிறார்கள்.

மறுநாள்  பங்கு பணத்தை பிரித்து அவரவர் கைகளில் தந்து அனுப்பும் வரை அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் யாரும் தொலைபேசி ஆன் செய்யகூடாது என கூறுகிறார் நகைகடை ஓணர். உபரியாக தங்கத்தை உருக்கி வேறுவடிவத்துக்கு மாற்றும்வரை போகவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொலைபேசிகள் ஆஃப் செய்ய படுகிறது.

தற்போது நடுச்சாமம்.

இவர்களுக்கு ஏற்கனவே கூறிய கடையை விட்டு வேறொரு தெருவிலிருக்கும் கடையை திறந்து விடுகிறார்(அந்த கடையும் அவருடையது தான்)

நகைகடையை திறந்து தரையிலுக்கார்ந்து ஒருபுறம் சோபி பதினைந்து லட்சத்தை எண்ண ஆரம்பிக்க மறுபுறம் தம்புள்ள போய்வந்தவர்கள் படுத்த படி ஓய்வெடுக்க நகைகடைகாரரும் அவருடன் நிற்கும் மற்றவர்களும் தங்கத்தை உருக்கும் பணிகளுக்கு ஆயத்தபடுத்துகிறார்கள்.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

தங்கத்தை உரசி பார்க்கிறார்கள்...

உள்ளே செப்பு!.

'பகீர்'

ஒவ்வொன்றாக உரச அதே விளைவு தான். செப்புக்கு தங்கமுலாமிட்டிருக்கிறார்கள்.
ஐந்து லட்சம் அபேஸ்.

அவர்களது தொலை பேசிக்கு அழைத்தால் ச்விச் ஆஃப் செய்ய பட்டிருக்கிறது.
பொலிசிடம் புகாரளிக்க முடியாது.

பொலிசிடம் 'சீமெந்து மூட்டை அனுப்புவதாக கூறி பணமோசடி செய்துவிட்டார்கள். அவர்களை தேடி போகிறோம் கிடைத்ததும் தகவல் தருகிறோம். பிடிக்க உதவுங்கள்' என்று மட்டும் கூறி அவர்கள் மூலம் தம்புள்ள பொலிசிற்கும் அறிவித்துவிட்டு,
மறுநாள் கூட்டமாக கிளம்பி தம்புள்ளவில் அந்த இடத்தை அடைந்தால் கொட்டகையையும் காணோம், சீமெந்து மூட்டைகளையும் காணோம். 

அத்திவாரம் மட்டும் அப்படியேயுள்ளது.

ஏடிஎம்க்கு சோபியுடன் வந்தவனின் வங்கி கண்காணிப்பு கமரா வீடியோவை ஆராய்நதால் அவன் ஏடிஎம்க்குள் நுளையவே இல்லை, முதுகைகாட்டியபடி பர்ஸை கையில் எடுத்து பாத்து விட்டு திரும்பி நடந்து போயிருக்கிறான்.

அவனது போன் நம்பர்!!! ஐடி கார்ட் கொடுக்காமலே சிம் வாங்கப்பட்டிருக்கிறது.

ஆக இரண்டு விதமான தங்க துகள்கள் வைத்திருந்திருக்கிறார்கள், சாம்பிள் பார்க்க கொடுத்தது ஒரிஜினல் தங்கம்.

பணத்தை வாங்கி கையில் கொடுத்தது டூப்பு.

அவர்களது முன்னேறாபாடுகளை வைத்து பார்க்கும் போது... இந்த சம்பவம் நம் நண்பருக்கு மட்டுமல்ல, இதற்கு முதலும் இதற்கு பிறகும் தொடரும்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails