Wednesday, September 3, 2014

பஸ்ஸில் டிக்கட் எடுக்காமல் போவது எப்படி?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்பவர்கள் காலையில் ஆயிரத்து முன்னூறு ரூபாக்கு பஸ் புக் செய்து மாலையில் ஆட்டோவுக்கு இருநூற்றம்பது கொடுத்து பஸ் புறப்படும் இடத்துக்கு சென்று தம் சீட்டில் அமருவது வழக்கம்.

இரண்டு மூன்று முறை இப்படி சென்றால் டிக்கட் போடும் இளைஞர் பழக்கமாகி அடுத்தமுறை போன்செய்தே புக்செய்துவிட்டு பிரதான சாலையில் பஸ்வரும் நேரம் ஏறிச்செல்வதும் உண்டு. அடுத்த கட்டமாக நூறு ருபா குறைவாக வாங்குவார்கள்.

அல்லது நூறு ரூபா அதிகம் கொடுத்து இளம் பெண்களுக்கு அருகில் சீட் புக் செய்பவர்களும் உண்டு.

நாம் பஸ் ஏறுவது வித்தியாசமானது... 
நண்பர்களுடன் பைக்கில் பஸ் புறப்படும் நேரத்துக்கு சற்று முன் பண்ணையடிக்கு சென்றால் அங்கு டிக்கட் போடுபவர்கள் 'நம்ம பஸ்ல போலாம் வாங்க' என்பார். 

அடுத்தவர் முந்தி கொண்டு 'முன்னுக்கு சீட் இருக்கு வாங்க' என்பார்கள். 

அடுத்தவர் 'ரெண்டு சீட் ஃப்ரீயாதான் இருக்கு படுத்திருந்தே போலாம் வங்க' என்பார். 

அப்போ அவசர பட்டு உள்ள ஏறிட கூடாது. மெதுவாக டிக்கட் எவ்வளவுனு கேக்கணும் அவர் 'ஆயிரத்தி இருணூறு உங்களுக்கெண்டபடியா ஆயிரம்' என்பார்.

அடுத்த பஸ் காரர் இத பாத்திட்டு நிப்பார். அவரிடமிருந்து விலகி இவர் பக்கமாக வந்தால் மெதுவாக 'எண்ணூறு ரூபாக்கு போலாம் வாங்க' என்பார்.

இதல்லாத்தயும் மூணாவதா ஒரு கண்டக்டர் பாத்திட்டு நிப்பார் அவர் பஸ் புறப்படுறதுக்கு ஐஞ்சு நிமிஷம் தான் இருக்கும் அவர்பக்கம் போனா 'இந்த பஸ் வெளிக்கிட போகுது அறுநூறு படி ஏறுங்க மற்ற பஸ் காரரிட்ட சொல்லாதீங்க... டிக்கட் தரமாட்டன்... இப்பவே காச தந்திருங்க' என்பார் டமால்னு அவர் கைல தலா ஐநூற குடுத்திட்டு உள்ள ஏறிரணும்.

வெளில இருந்த பஸ்களின் இஞ்சின் சத்தம், வவுனியா... கண்டி... கொழும்பு... திருகோணமலை... என்ற கண்டக்டர்களின் கூவல் சத்தம், புறப்படும் பஸ்களின் ஹார்ண் சத்தம் இத்தோட நாம பேரம் முடிஞ்ச அமளில கெக்கே பிக்கேன்னுட்டு  உள்ள போனா உள்ளருக்கற மத்தவங்க 'யார்றா இவனுங்க பிந்தி வர்ரானுங்க பஞ்ஷுவாலிட்டி தெரியாத பயபுள்ளங்க'ன்ற மாரியே நம்மள பாப்பாங்க.

நம்ம சீட்ல ஒக்காரவும் பஸ் புறப்படவும் டிவில படம் ஓடவும் சரியாயிருக்கும்.

இப்படியான நாட்களில் அருகில் அமர்பவர் கலகலப்பானவராகவோ, சரளமாக பேசக்கூடியவராகவோ அமைந்துவிட்டல் அது வரம்.

மாறாக அவர் உம்மாஞ்சியாகவோ, வெரி டீசன்ட் வெட்டி பந்தா ஆசாமியாகவோ இருந்தால் சீட்டை சரித்து விட்டு லப்டப்பை ஆன்செய்து இயர்போனை காதில் போட்டு படம் பார்க்கவேண்டியதுதான் ஏனெனில் பெரும்பாலும் பஸ் டிவியில் ஓடும் படம் ஏற்கனவே பார்த்ததாகவோ அல்லது விஜய் படமாகவோ இருக்கும்.

ஒரு தடவை ஷூ அயன் பண்ண சேர்ட்டுலாம் போட்டு என்பக்கத்துல உக்கார்ந்த  வெரி டீசன்ட் நடுத்தரவயது ஆசாமி ஒருவர் பஸ் புறப்பட்டதுலருந்து அடுத்தநாள் காலை இறங்கும் வரை தூங்கி என்மேல விழுந்திட்டே இருந்தான். நான் ஒரு கையால அவன் என் மேல விழாதபடி புடிச்சிட்டே தாங்காம இரவுமுழுக்க பயணிக்க வேண்டியிருந்தது.

இன்னொரு தபா முன் சீட்டில் ஒரு அஞ்சுவிரல்லயும் மோதிரம் போட்டு பட்டு வேட்டி கட்ன டபுள் எக்ஸ்எல் சைஸ் ஒரு முதியவரும் அவர் மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

பஸ்க்குள் டிம் லைட் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

நடுச்சாமம் தாண்டியதும் பஸ்க்குள் இன்னொரு ஆட்டோ ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அந்த சத்தம் பஸ் இஞ்சின் சத்தமாக மாறியது. பின்னர் அது கார் இஞ்சின் சத்தம் வான் இஞ்சின் சத்தம் ன மாறி மாறி இறுதியாக ஏதோவொரு தொழிற்சாலையின் சத்தமாக தொடர்ந்தது.

பின்னிரவில் டீ குடிக்க இறங்கிய போது அது அந்த முதியவரின் குறட்டை என்பதை அறிந்து கொண்டோம்.

 அவர் மனைவி இறங்கி தண்ணீர் போத்தல் வாங்கிவந்து அவருக்கு கொடுத்தார். பஸ் கதவுக்கருகில் சிகரட் பற்றியபடி நிற ஒருவர் சொன்னார்

'ஒருநாள் இரவு நம்மாலயே தாங்கமுடியலயே பாவம் இந்த அம்மா, டெய்லி எப்டி தான் தூங்கறாங்களோ!'.

இன்னொருவர் சொன்னார்  'ஐயா தொண்டை வரண்டிருககும்னு தண்ணி குடுக்கறாங்க. குடிச்சிட்டு செக்கண்ட் இனிங்ஸ் ஆரம்பிபார்'.

இப்போது பஸ்ஸில் வந்தவர்கள் பெண்கள் உட்பட இந்த ஐயாவால் தமக்குள் அன்னியோன்னியமாகிவிட்டிருந்தனர்.

மறுபடி பஸ் புறப்பட்டது அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஐயா இடிமின்னலை ஆரம்பித்தார். 

இதுவரை மற்றவர்கள் என நினைப்பார்களே என பேசாமல் வந்த சக பயணிகள் லைட் ஆஃப் செய்ததும் சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்தனர்.

பின்னாலிருந்த இளைஞன் ஒருவன் 'ஐயா இப்போ பூபாள ராகத்துல பொழந்து கட்டறாரு என்றான்'

இன்னொருவன் கொஞ்சம் அடிதடி ஆசாமியாருப்பான் போல 'களிமண்ண எடுத்து அந்தாளு வாய்ல அடைங்கப்பா! எங்கிருந்து சத்தம் வருதுன்னு பாப்பம் என்றான்'

முன் சீட்டுக்கருகில் இருந்தவர்கள் திடீரென மூக்கை பொத்தினார்கள். ஒரு பெட்ஷீட் போர்த்திய கன்னி ஒன்று 'கண்டக்டரண்ணா ஏசிய கூட்டுங்க ப்ளீஸ்' என கூவியது.

பஸ்ஸின் நடு பக்கம் இருந்த எமக்கு அந்த ஐயா, வாயால் மட்டும் குறட்டை விடவில்லை என்பது மட்டும் புரிந்தது. நமது நண்பன் ஒருவன் சத்தமாக 'நீங்க ஐயாக்கு வாய்ல களிமண் அடைஞ்சாலும் சத்தம் வரும் ஓய்..! அதுக்கு தான் பர்ஸ்டு வார்ணிங் குடுக்கறார்' என்றான்.

மறுநாள் அதிகாலை...
அவரது மனைவி தூக்கத்திலிருந்து எழுந்தார்(இப்போது நல்ல வெளிச்சம் என்பதால் அவர்கள் முகங்களை பர்க்க முடிந்தது) சகஜமாக தன் காதுகளிலிருந்து இரண்டு பஞ்சுகளை எடுத்து கைப்பையினுள் வைத்தார்.
அட! இபடித்தான் டெய்லி தூங்குவாங்களோ என ஆச்சரியப்பட்டோம். பரவால்ல போன ஜெமத்துல என்ன பாவம் செஞ்சாங்களோ!

அடுத்து எழுந்த முதியவர் தானும் ரெண்டு பஞ்சுகளை தன் காதிலிருந்து எடுத்து போட்டார்(அடங்கொன்னியா! உன் குறட்டை சத்தம் உனக்கே கேக்காம தான் தூங்குனியா)

அந்த ஐயா ஹொட்டஹேனா வந்ததும் இறங்குவதற்கு ஆயத்தமானார். பின் சீட்டிலிருந்த ஒருவர் 'நைட்டு ஃபுல்லா மிமிக்கிரி செய்து என்டர்ட்டெய்ன் செய்த ஐயா இறங்க போராரு எல்லாரும் கைதட்டுங்க என்றார். அவரோ யாரோ யாரையோ சொல்லுகிறார்கள் என்பது போல முகத்தை வைத்திருந்தார்.

அவர் இறங்கும் போது 'ட்ரைவர் அடுத்த வாட்டி இவர பஸ்ஸுல ஏத்தாதீங்க பஸ்ஸ இவர் வாய்லயே ஏத்துங்க' என்றான் யாரோ ஒருவன்.

இன்னொரு நாள் பயணத்தில் அருகில் அமர்ந்தவர் ஒரு இளைஞன் சொந்தமாக பட்டா குட்டி யானை வாகனம் வைத்திருப்பவனாம். இலங்கையின் பல பாகங்களுக்கும் காய்கறிகள் சப்ளை செய்பவராம்.பெயர் பார்த்தீபன். ஆள் பாக்க இளிச்ச வாய் மாதிரி இனசன்டாக 'யார் பெத்த புள்ளயோ'ன்ற மாதிரி இருந்தான். அவர் சொன்ன சம்பவம் இது.

வழியில் ஓர் சாலை பிரிகிறது, அதை காட்டி 'இங்கு தான் நடந்து!' என ஆரம்பித்தான்.

இவரும் குட்டியானை ட்ரைவரும் நண்பர்களுடன் காய்கறிகளை இறக்கிவிட்டு புத்தளத்துக்கருகில் வந்து கொண்டிருக்கிறார்கள் ட்ரைவர் 'தூக்கம்வருது, இந்த இடம் பயங்கரமானது போலிருக்கு, பக்கத்துல ஏதாச்சும் யாழ்ப்பாண நம்பர் வாகனம் நிண்டா நாமளும் நிறுத்தி தூங்கிட்டு போலாம்' என சொல்ல ஓரிடத்தில் யாழ்ப்பாண இலக்கத்தகடுடைய லாரியை கண்டு அதனருகில் நிறுத்துகிறார்கள்.

அந்த லாரிகாரரோ தாம் இதுவரை இங்கு தூங்கிவிட்டதாகவும் நீங்களும் தங்கி வாருங்கள், இடம் பயமில்லை, நாம் புறப்படுகிறோம் என கூறி புறப்பட்டு செல்கிறார்கள். குட்டியானை பார்த்தீபனுக்கு வாகன லீசிங் கட்டவேண்டிய தேதி நெருங்கிகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு முறை காய்கறி சப்ளை செய்த பணத்துக்கான செக் வங்கியில் திரும்பிவிட்டது. யாழ்ப்பாண தமிழன் என்ன கிறுக்கனா என பேசிக்கொண்டிருந்து விட்டு வாகனத்துக்கு கீழே விரிப்பை விரித்து தூங்க ஆயத்தமானார்கள்.

அருகில் சிகரட் பிடிக்க என போன ட்ரைவர் திரும்பிவந்து 'பார்த்தீபன்ணே! பாத்தீங்களா அங்க எலக்ட்ரானிக் கடைய என்னமா மெய்ன்டென் பண்றாங்க நம்மூர்ல இப்டி இல்லயே' என கூற அவன் காட்டிய பக்கம் ஓர் எலக்ரானிக் கடை வெளிப்புறம் கண்ணாடி சுவரால் உள்ளேயும் வெளியேயும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

பார்த்தீபனுக்கு அதை பார்த்ததும் லீசிங் ஆபிஸ் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

உள்ளே டிவிகள், மியூசிக் ஐட்டம்கள், டிவிடி ப்ளேயர், ஹிந்தி பட சிடிகள், மிக்ஸி, வாஷிங்மெஷின் இன்னும் சில என்னண்ணே தெரியாத எலக்டானிக் ஐட்டங்கள் காட்சியறையில் இருக்கின்றன.

காய்கறி இறக்க உதவிக்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவன் ட்ரைவரிடம் சிகரட்டை வாங்கி பற்ற வைத்த படியே(பேசிக்கலி அவனுக்கு தம்மடிக்கும் பழக்கம் இல்லையாம்) பிரதான சாலையிலிருந்து கடையருகில் சென்று நோட்டம் விடுகிறான். 

வாகன புழக்கம் இல்லாத பகுதி.
 திரும்பி வந்து அந்த டிவிய எடுத்து தாறன் யாழ்ப்பாணத்தில கொணந்து எனக்கு தரோணும் என ட்ரைவரிடம் கூறிவிட்டு உங்களுக்கு என வேணும் என பார்த்தீபனை கேட்கிறான்.

'ஒரேயொரு டிவிய கொண்டுபோய் என பண்றது, எல்லா டிவியையும் ஏத்துவம்'

அடுத்து குட்டியானை அந்த கடையடிக்கு நகர்கிறது.

ஒருவன் கூரைமீதேறி அந்த மஸ்கனைட் சீட்டை வாகன சாவியால் கழட்டி உள்ளே இறங்க சதுரவடிவ அலங்கார தட்டுகள் அவற்றிலேயே யூ பல்ப்புகள் மாட்டப்பட்டிருககும் அதை மேலேயிருந்து கையால் தூக்கினா அப்டியே வந்திடுச்சாம் அந்த சதுர வடிவ துவாரத்துக்குள் இறங்கி மேசையை துவாரத்துக்கு நேரே போட்டுவிட்டு உள்ளிருந்து ஒருவர் மேலே கொடுக்க துவாரத்திலிருப்பவன் வாங்கி கூரையிலிருப்பவனிடம் கொடுக்க அவன் எஞ்சின் ஸ்ரார்ட் செய்யப்பட்ட நிலையிலுள்ள வாகனத்திலிருப்பவனுக்கு கொடுக்க வாகனம் நிம்பியாயிற்று.

 அனைவரும் வந்தாயிற்று ட்ரவர் டென்ஷனில் தம்மடித்தபடியுள்ளார். புறப்பட வேண்டியது தான் பாக்கி. (விதி!)

நில்லுங்கண்ணே வாரேன் என இறங்கி ஓடிய நண்பன் ஒருவன் தனியாக உள்ளே போய் அங்கிருந்த சுழல கூடிய கதிரையை தூக்கி கூரையிலிருப்பவனிடம் கொடுக்க முயல அது துவாரத்துள் நுளைய மாட்டேன் என்கிறது பார்த்தீபனோ மேலிருந்து 'கதிரை கிடக்கட்டும் வாடா யாரும் வந்திட போறாங்க' என்கிறான்.

அந்த நேரம் கடை ஓணரும் அவன் நண்பன் ஒருவனும் அவ்வழியால் மோட்டார் பைக் ஒன்றில் வந்தவர்கள் இதை கண்டுவிட்டு 'எங்க கடை கதிரை' என சிங்களத்தில் கத்துகிறார்கள். உள்ளே மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டதால் ஏனய பொருட்கள் போனதை காணவில்லை.

இவர்கள் பயந்தாலும் கடை ஓணர் இவர்க நோக்கி வருகிறான். பார்த்தீபனும் நண்பனும் மட்டுமே கடையருகில் மற்றவர்கள் தயாராக வாகனத்துக்குள். கடை ஓணரின் நண்பன் யாருக்கோ அனேகமாக போலிசுக்கு போன் செய்கிறான்

பார்த்தீபனும் கடை ஓணரும் ஏதோ பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக ட்ரைவர் வண்டிக்குள்கிடந்த ஏதோவெரு பொருளால் கடை ஓணரை தாக்க ஆரம்பிக்க அவர்கள் பைக்கில்  ஏறி புறப்பட இவர்களும் வாகனத்தில் புறப்படுகிறார்கள்.

எபடியும் அவர்கள் ஊர் மக்களை கூட்டிககொண்டு நம்மை தேடுவது உறுதி என்றவாறே வாகனம் செல்கிறது.
டாட்டா பட்டா குட்டியானை வாகனம் வேகம் 45கிமீ தாண்டி ஓடுவதே அபூர்வம்.

போய்க்கொண்டிருக்க அடுத்த சந்தியில் மூன்று மோட்டார்வண்டி கூடவே கடைக்காரனின் நண்பனும் அவன் இவர்களை அடையாளம் காட்ட பின்தொடர்கிறார்கள்.

சிறிது நேரத்தில் கடைக்காரனும் இன்னும் ஏழெட்டு மோட்டார் வண்டிகளும் சூழ்கிறது.

பார்த்தீபன் மற்ற நண்பர்களிடம், 'அவர்கள் இன்னும் பத்து நிமிடத்துக்குள் நம்மை சுற்றி வழைத்து விடுவார்கள்'

ட்ரைவர் 'முன்னுக்கு மேட்டபைக் வந்தா ஒரே ஏத்து தான்'

நண்பன் ஒருவன் வண்டியின் பின்புறம் நின்றவன்  உள்ளே கிடந்த டிவிடி ப்ளேயரை பின்தொடர்ந்த வாகத்தை நோக்கி வீசுகிறான்.

இப்போது உற்சாகமான பார்த்தீபன் 'பிடிபட்டா அவங்கட சாமான் ஒண்டும் உள்ள இருக்க கூடாது ஒரு நட்டு கூட இல்லாம தூக்கி வீசுங்க'என கத்த,

டிவி, ரேடியோ, கிரைண்டர் என வீதியில் அருகிலுள்ள வீடுகளில் பாலத்தில் மாறி மாறி விழுகிறது. சில பைக்குகள் இவர்களை முந்தி பாதையை மறித்து சென்று கொண்டிருக்கிறது. செய்த வேலையை விட ஓணரையும் தாக்கியமையால் இவர்களிடம் பிடிபட்டால் சங்கு நிச்சயம்.

வண்டி காலியானதும் பார்த்தீபன் வண்டிக்குள்ளிருந்த இரும்பு சாவியால் முன் கண்ணாடியை நொருக்குகிறான்.

அருகிலிருந்த பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து வண்டியை நிறுத்துகிறார்கள்.

பொலிசிடம் ஓணர் நீண்ட நேரமாக ஏதோ சிங்களத்தில் சொல்கிறான். பார்த்தீபன் யாழ்ப்பாணத்திலிருந்த யாருக்கோ போன் செய்துவிட்டு போலிசார் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வண்டி சாவியை போலிசிடம் கொடுத்துவிட்டு ஜெயிலில் உட்காருகிறார்கள்.
நேரம் இரவு மூன்று மணி இருக்கும்

மறுநாள் மதியம் யாழ்பாணத்திலிருந்து நண்பனும் ஒரு வக்கீலும் வந்திருந்தனர். வக்கீல் இவர்களுடன் பேசுகிறார்.
மதியமே இவர்களை துணியால் மூடி ஜீப்பில் ஏற்றி கோர்ட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.

இவர்கள் கூண்டில் நிற்கின்றனர்.

ஆங்கிலத்தில் வழக்கு நடைபெறுகிறது. 

தீர்ப்பில் கடை ஓணர், பார்த்தீபனுக்கு நாற்பத்து ஐந்தாயிரம் ரூபா கொடுக்க வேண்டும் என கூறி இவர்கள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் வக்கீல் ஆங்கிலத்தில் கோர்ட்டுக்கு சொனது என்னன்னா...

'குற்றம் சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் மரக்கறி ட்ரான்ஸ்போர்ட் பணிகள் முடித்து திரும்பிகொண்டிருந்த போது பொது இடத்தில் சிகரட் பிடிக்காமல் ஒதுக்கு புறமாக வண்டியை நிறுத்தி சிகரட் பிடித்திக்கிறார்கள். 

அதற்கு முதல் யாரோ அந்த இடத்திலிருந்த இவர்களது கடையில் களவாடிவிட்டு தப்பி சென்றுள்ளார்கள், அல்லது இவர்களே களவுபோனதாக நாடகமாடலாம். அங்கு வந்த கடை ஓணர் எமது கட்சிகாரரை தாக்கி வாகன கண்ணாடியை நொருக்க சற்றும் எதிர்பாராத நம் கட்சிகாரர், இவர் நடுசாமத்தில் வழிப்பறிக்காக நம்மை தாக்குவதாக நினைத்து ஓணரை திருப்பிதாக்கியுள்ளனர். 

ஏனயவர்களும் கூட்டாக வெறிகொண்டு துரத்த ஆரம்பிக்கவே உயிரைகாப்பாற்ற வாகனத்தில் தப்பித்து தம் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்தில் புகுந்து நீதி கேட்டுள்ளனர்.

ஏதோ பொருட்கள் காணாமல் போனதாக கூறும் கடை ஓணருக்கு எமது அனுதாபங்களை தெரிவிப்பதோடு, தற்பாதுகாப்புக்காக தாக்கியதால் ஏற்பட்ட காயத்துக்கு மன்னிப்பு கேட்பதோடு, நீங்கள் நொருக்கிய எம் வாகன கண்ணாடிக்கான பணத்தை பெற்று தருமாறு தாழ்மையாக வேண்டுகிறோம்'

இந்த கதையை அருகிலிருந்தவன் சொல்லி முடித்திருந்தான்.
இப்போது அவனை பார்க்க 'நீயாடா இந்த காரித்த பண்ணே' என்பது போல இருந்தது.

பயணங்கள் பலவித மனிதர்களை சந்திக்கவைக்கிறது.
விந்தையான மனிதர்கள், வித்தியாசமான உணவுகள், மற்றவர்களது மத சம்பிரதாயங்கள், கலாசாரம் தாண்டிய ஆடைகள் இவற்றை அறிய முற்படாமல் தொடர்ந்தும் ஒரேமாதிரியே வாழவிரும்பின் வெளியில் செல்லாமல் வீட்டிலிருப்பதே சிறந்தது.

நாளை மற்றொரு நாளே!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails