Thursday, September 4, 2014

நடுக்காட்டில் ஓர் தங்க வேட்டை - உண்மை சம்பவம்.

இது என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது...

அவரு பேரு சோபி.
ஐடி பணியாளர். 

போதுமான பணப்புக்கம் இருந்தாலும், தேவைகளும் அதிகமாக இருந்ததால் சொந்த பிஸ்னஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலிருப்பவர்.

இவர் உணவகம் ஒன்றில் துறைமுகத்தில் பணிபுரியும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறார்.

அவர்களில் ஒரு சிங்கள பணியாளன், சோபியிடம் யாழ்ப்பாணத்தில் தனக்கு இடங்கள் தெரியாது எனவும் நல்ல சாப்பாட்டு கடை எங்கிருக்கிறது? தங்கிநிற்க நல்ல இடம் எது? எனவும் கேட்டறிய சோபியுடன் உணவருந்தியபடியே சகஜமாக பேச ஆரம்பித்துள்ளான்.

அவரை பற்றி விசாரிக்க தான் பிறிமா மாவு இறக்குமதி பணியாளன் எனவும் தம்புள்ள பகுதியை சேர்ந்தவர் எனவும், இங்கு யாரையும் தெரியாது எனவும் கூறியதுடன், தொலைபேசி எணையும் வாங்கி சென்றார்.

அன்று மாலையே தான் அருகிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிநிற்பதாகவும் ஏடிஎம் எங்கிருக்கிறது என தொலைபேசியில் விசாரித்தார்.

பதிலளித்த சோபி எந்த வங்கி என கேட்க இருவரும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவர தனக்கும் வங்கியில் தேவை இருக்கிறது அங்கு தான் புறப்பட போகிறேன் சேர்ந்தே போவோம் என அருகிலுள்ள அவரது விடுதிக்கு சென்று இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

பேச்சுவாக்கில் இந்த வங்கியில் தங்கம் அடவு எவ்வளவு? நகையாக இல்லாமல் தங்க கட்டியாக வாங்குவார்களா என கேட்டார்.

பதிலுக்கு சோபி வங்கியிலேயே கேட்போமே என கூற யாழ்ப்பாணத்தில் நகை அணிவது தமிழ் கலாசாரம் என்பதால் இங்கு அடகு வைக்க போகிறேன் எமது பகுதியில் ஏன், எதற்கு என கேள்வி கேட்பார்கள் என்றவர்.

தொடர்ந்து தனது உறவினர் தம்புள்ளயில் காணி வாங்கியதாகவும் அதில் வீடுகட்ட அத்திவாரம் வெட்டும் போது தங்கம் கிடைத்ததாகவும் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறினார்.

மேலும் தமது பிரதேசத்தில் விற்க பயமாக உள்ளது என்றும் எப்படியாவது குறைந்த விலைக்காவது விற்க வேண்டும் என்று கடந்த முறை யாழ்ப்பாணம் வந்த போது நல்லூர் உண்டியலில் சிறிது தங்கம் போட்டு வேண்டிக்கொண்டேன் எனவும் கூறினார்.

தற்போது வங்கியை அடைந்திருந்தார்கள். சோபி வங்கிக்குள் நுளைய அந்த நபர் தன் பர்ஸை கையில் எடுத்தபடி ஏடிஎம்ஐ நோக்கி சென்றார்.

மறுநாள் சோபி அவருக்கு போன் செய்து அந்த தங்கத்தை தானே வாங்குவதாயும், நேரில் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார்.

அந்த நபர் தன்வீட்டுக்கு வரும்படி அழைக்க சோபியின் சகோதரனும் இன்னொரு நண்பனும் அவருடன் புறப்பட்டார்கள்.

தம்புள்ளயில் இறங்கி இன்னொரு பஸ் புடித்து உள்ளே சென்றால் மலைக்குன்றுகள் நிறைந்த ஓர் கிராமம்.

அங்கிருந்து ஆட்டோவில் மரங்கள் நிறைநத ஓர் பகுதியை அடைந்து, உள்ளே நடந்து செல்ல புதிதாக காட்டை துப்புரவு செய்து உருவாக்கப்பட்ட பாதை, 

முடிவில் அந்த நபரின் உறவினர் புதிதாக வாங்கிய காணி.

முன்பு மன்னர்கள் யாராவது ஆண்ட பகுதியாயிருக்க கூடும்...!

கட்டட வேலைக்காக பறிக்கப்பட்ட சீமெந்து மூட்டைகள், கட்டட தொழிலாளர்கள் தங்கிநிற்க தற்காலிக கொட்டகை.

அதில் இவரது உறவினர் இருந்தார். இவர்கள் பார்க்க வருவதால் அன்று கட்டட வேலைகளை நிறுத்தியிருப்பதாக கூறினார்கள்.

அருகில் அத்திவாரம் வெட்டியிருந்தார்கள், பணியாளர்களது ஆடைகள் உலர்ந்து கொண்டிருந்தன.

அந்த உறவினர் கொட்டகையிலுள்ள ஓர் வெற்று பெயின்ட் வாளியிலிருந்து ஓர் பார்சலை எடுக்கிறார்,அது சீமெந்து பையால் சுற்றபபட்டிருக்கிறது.

அதை பிரிக்க உள்ளே துணியால் சுற்றப்பட்ட ஏதோவெரு பொருள் அதையும் பிரிக்க உள்ளே செப்பால் செய்யப்பட்ட உள்ளங்கையில் வைக்க கூடிய சிறிய மூடியுடன் செம்பு ஒன்று.

செம்பின் அடியில் மண் ஒட்டியிருக்கிறது.

கொட்டகையினுள் மரக்குற்றிகளாலேயே சிறிய டீப்பாய் போன்றும் அதை சுற்றி அமரகூடியவாறும் அமைத்திருந்தார்கள்.

அந்த டீபாயில் மூடியிருந்த துணியை விரித்து செம்பை கவிழ்த்தார்.

உள்ளேயருந்து தங்கம் கொட்டியது, அது தங்க பிஸ்கட் வடிவிலோ, நாணய வடிவிலோ ஆபரணமாகவே இருக்கவில்லை. தண்ணீர் துளி வடிவில் துகள் துகளாக காணப்பட்டது.

அவற்றை அவர்களை எடுத்து சென்று யாழ்ப்பாணத்துககு போய் பணத்தை தருமாறு கூறினார்.

மேலும் இதற்கு முன்னரும் தமிழர் ஒருவர் வாங்க வந்ததாகவும் இரவு ஷாம்பெய்ன் போத்தலுடன் தங்கிநின்று விருந்து வைத்ததாகவும் காலையில் சொல்லாமலே கிளம்பிவிட்டதாகவும் கூறினார்.

அதனால் தங்கத்துடன் தாம் பணம் வாங்க யாழ்ப்பாணம் வருவது பயமாக உள்ளது எனவும், நீங்கள் சென்று மறுபடி பணத்துடன் வாருங்கள் எனவும் பாதிவிலைக்காவது விற்றால் போதும் என தமக்கு இருப்பாகவும் கூறினார்.

அவர்களிடம் இருந்த சிறிய தராசில் நிறுத்து சமகால தங்கவிலையுடன் கணித்த போது பதினாறு இலட்சம் பெறுமதி இருக்கலாம் என ஊகிக்க முடிந்தது.

நம்மாளுங்க எழுமாறாக சில துகள்களை சாம்பிளுக்காக எடுத்து கொண்டு புறப்பட்டனர்.

அன்று முன்னிரவில் யாழ்ப்பாணத்தை அடைந்தவர்கள் சோபிக்கு சாம்பிள் தங்கத்தை காண்பிக்கவே, இரவேடிரவாக தங்கநகை வேலை செய்பவர்களின் உதவியுடன் பரிசோதித்து பார்க்கப்படுகிறது.

இயந்திர பரிசோதனை முடிவில் அது சுத்த தங்கம் என்பதற்கான ரசீதுடன் சோபி எம்மை சந்தித்து இந்த விடையங்களை கூறியதுடன் மறுநாள் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு தன் சகோதரனும் நண்பர்களும் புறப்பட இருப்பதையும் கூறினார்.

எம் முன்னாலேயே அந்த சிங்கள நபருக்கு போன் செய்து ஐந்து லட்சத்துக்கு தருமாறு கேட்க அவரோ எட்டு லட்சத்துடன் வாருங்கள் இல்லாவிட்டால் வேறு ஆள் பார்க்கிறோம் என கூறி போனை வைத்து விட்டார்.

மறுநாள் சோபியின் சகோதரன் அனுடன் துணிச்சலான நண்பன் ஒருவன் புறப்படுகிறார்கள்.

அவர்களது இடத்துக்கு போவதில்லை எனவும் சனநடமாட்டமுள்ள பகுதியில் வைத்து பணத்துக்கு பொருளை மாற்றுவது என்றும் திட்டமிட்டிருந்தார்கள்.

தம்புள்ளவில் இறங்கி போன் செய்து அவர்களை வரவைத்து, ரெஸ்டாரன்ட் ஒன்றில் பேசிக்கொண்டிருந்துவிட்டு அனைவரும் ஆட்டோ ஒன்றில் ஏறி அருகிலுள்ள வங்கிக்கு சென்று ஆட்டோவில் மற்றவர்கள் காத்திருக்க நம்மாளுங்க உள்ள போயி பணத்துடன் வந்து பணத்தை கொடுக்க அந்த செம்பை கொடுக்கிறார்கள்,

செம்பின் வௌிப்புறம் ஒட்டியிருக்கும் அத்திவார மண்ணை துடைத்து சோபியின் சகோதரன் தங்கத்தை நண்பனின் இருகைகளிலும் கொட்டி சரிபார்த்து மீண்டும் செம்பினுள்ளே கொட்டுகிறான்.

ஆட்டோவில் வைத்து பணத்தை எண்ணுகறார்கள். ஐந்து லட்சம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு பணத்தை மீணடும் கொடுத்துவிட்டு செம்பை வாங்கிவிட்டார்கள்.

நம்மாளுங்க சோபிக்கு போன் செய்து விடையத்தை சொல்ல, மீண்டும் போனில் பேரம் நடக்கிறது. 

அவர்களோ 'உங்களை நம்பி பொருளை கொண்டுவந்தால் இப்படி செய்கிறீர்களே' என கோபமாக கூற, சில நிமிட பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கைகளால் சிறிது தங்கத்தை எடுத்து கொண்டு பணத்தை வாங்கி கொண்டு செம்பை கொடுத்து விடுகிறார்கள்.

இவர்களை பஸ் ஏற்றி பஸ் புறப்படும்வரை காத்திருந்து 'பத்திரமாக போங்கள். போனதும் போன் செய்யுங்கள்' என கூறி அனுப்பிவைத்தாரகள்.

புறப்பட்டவரகள் அடுத்த இரண்டாவது இறக்கத்தில் இறங்கி வேறோர் பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்கிறார்கள்.

ஏனெனில் யாரும் இவர்கள் போகும் வண்டியை கண்காணித்து பொலிசில் மாட்டிவிடாமலிருக்க இந்த ஏற்பாடு.

யாழப்பாணத்தை அடைந்தபோது முன்னிரவு ஆகிவிட்டிருந்தது. இதுவரை இந்த விடையம் வேறு யாருக்கும் தெரியாது.

பஸ் ஸ்டான்டிலேயே காத்திருந்த சோபியிடம் பார்சலைகொடுக்கிறார்கள், பிரபல நகைக்கடை ஒன்றில் பதினைந்து லட்சத்துக்கு இதை வாஙகுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சிலர் காத்திருக்கிறார்கள்.

அருகிலுள்ள வேறு நகை கடை வியாபாரிகள், சந்தேகத்துக்கிடமான ஆசாமிகள், சன நடமாட்டம் என்பன ஓய்ந்ததுமே நகைகடையை திறந்து மற்றவர்கள் உள்ளே போகமுடியும்.

சாதாரணமான கொத்துரொட்டி கடை ஒன்றில் அனைவரும் சாப்பிட்டபடியே நேரத்தை நகர்த்துகிறார்கள்.

மறுநாள்  பங்கு பணத்தை பிரித்து அவரவர் கைகளில் தந்து அனுப்பும் வரை அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் யாரும் தொலைபேசி ஆன் செய்யகூடாது என கூறுகிறார் நகைகடை ஓணர். உபரியாக தங்கத்தை உருக்கி வேறுவடிவத்துக்கு மாற்றும்வரை போகவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொலைபேசிகள் ஆஃப் செய்ய படுகிறது.

தற்போது நடுச்சாமம்.

இவர்களுக்கு ஏற்கனவே கூறிய கடையை விட்டு வேறொரு தெருவிலிருக்கும் கடையை திறந்து விடுகிறார்(அந்த கடையும் அவருடையது தான்)

நகைகடையை திறந்து தரையிலுக்கார்ந்து ஒருபுறம் சோபி பதினைந்து லட்சத்தை எண்ண ஆரம்பிக்க மறுபுறம் தம்புள்ள போய்வந்தவர்கள் படுத்த படி ஓய்வெடுக்க நகைகடைகாரரும் அவருடன் நிற்கும் மற்றவர்களும் தங்கத்தை உருக்கும் பணிகளுக்கு ஆயத்தபடுத்துகிறார்கள்.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

தங்கத்தை உரசி பார்க்கிறார்கள்...

உள்ளே செப்பு!.

'பகீர்'

ஒவ்வொன்றாக உரச அதே விளைவு தான். செப்புக்கு தங்கமுலாமிட்டிருக்கிறார்கள்.
ஐந்து லட்சம் அபேஸ்.

அவர்களது தொலை பேசிக்கு அழைத்தால் ச்விச் ஆஃப் செய்ய பட்டிருக்கிறது.
பொலிசிடம் புகாரளிக்க முடியாது.

பொலிசிடம் 'சீமெந்து மூட்டை அனுப்புவதாக கூறி பணமோசடி செய்துவிட்டார்கள். அவர்களை தேடி போகிறோம் கிடைத்ததும் தகவல் தருகிறோம். பிடிக்க உதவுங்கள்' என்று மட்டும் கூறி அவர்கள் மூலம் தம்புள்ள பொலிசிற்கும் அறிவித்துவிட்டு,
மறுநாள் கூட்டமாக கிளம்பி தம்புள்ளவில் அந்த இடத்தை அடைந்தால் கொட்டகையையும் காணோம், சீமெந்து மூட்டைகளையும் காணோம். 

அத்திவாரம் மட்டும் அப்படியேயுள்ளது.

ஏடிஎம்க்கு சோபியுடன் வந்தவனின் வங்கி கண்காணிப்பு கமரா வீடியோவை ஆராய்நதால் அவன் ஏடிஎம்க்குள் நுளையவே இல்லை, முதுகைகாட்டியபடி பர்ஸை கையில் எடுத்து பாத்து விட்டு திரும்பி நடந்து போயிருக்கிறான்.

அவனது போன் நம்பர்!!! ஐடி கார்ட் கொடுக்காமலே சிம் வாங்கப்பட்டிருக்கிறது.

ஆக இரண்டு விதமான தங்க துகள்கள் வைத்திருந்திருக்கிறார்கள், சாம்பிள் பார்க்க கொடுத்தது ஒரிஜினல் தங்கம்.

பணத்தை வாங்கி கையில் கொடுத்தது டூப்பு.

அவர்களது முன்னேறாபாடுகளை வைத்து பார்க்கும் போது... இந்த சம்பவம் நம் நண்பருக்கு மட்டுமல்ல, இதற்கு முதலும் இதற்கு பிறகும் தொடரும்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, September 3, 2014

பஸ்ஸில் டிக்கட் எடுக்காமல் போவது எப்படி?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்பவர்கள் காலையில் ஆயிரத்து முன்னூறு ரூபாக்கு பஸ் புக் செய்து மாலையில் ஆட்டோவுக்கு இருநூற்றம்பது கொடுத்து பஸ் புறப்படும் இடத்துக்கு சென்று தம் சீட்டில் அமருவது வழக்கம்.

இரண்டு மூன்று முறை இப்படி சென்றால் டிக்கட் போடும் இளைஞர் பழக்கமாகி அடுத்தமுறை போன்செய்தே புக்செய்துவிட்டு பிரதான சாலையில் பஸ்வரும் நேரம் ஏறிச்செல்வதும் உண்டு. அடுத்த கட்டமாக நூறு ருபா குறைவாக வாங்குவார்கள்.

அல்லது நூறு ரூபா அதிகம் கொடுத்து இளம் பெண்களுக்கு அருகில் சீட் புக் செய்பவர்களும் உண்டு.

நாம் பஸ் ஏறுவது வித்தியாசமானது... 
நண்பர்களுடன் பைக்கில் பஸ் புறப்படும் நேரத்துக்கு சற்று முன் பண்ணையடிக்கு சென்றால் அங்கு டிக்கட் போடுபவர்கள் 'நம்ம பஸ்ல போலாம் வாங்க' என்பார். 

அடுத்தவர் முந்தி கொண்டு 'முன்னுக்கு சீட் இருக்கு வாங்க' என்பார்கள். 

அடுத்தவர் 'ரெண்டு சீட் ஃப்ரீயாதான் இருக்கு படுத்திருந்தே போலாம் வங்க' என்பார். 

அப்போ அவசர பட்டு உள்ள ஏறிட கூடாது. மெதுவாக டிக்கட் எவ்வளவுனு கேக்கணும் அவர் 'ஆயிரத்தி இருணூறு உங்களுக்கெண்டபடியா ஆயிரம்' என்பார்.

அடுத்த பஸ் காரர் இத பாத்திட்டு நிப்பார். அவரிடமிருந்து விலகி இவர் பக்கமாக வந்தால் மெதுவாக 'எண்ணூறு ரூபாக்கு போலாம் வாங்க' என்பார்.

இதல்லாத்தயும் மூணாவதா ஒரு கண்டக்டர் பாத்திட்டு நிப்பார் அவர் பஸ் புறப்படுறதுக்கு ஐஞ்சு நிமிஷம் தான் இருக்கும் அவர்பக்கம் போனா 'இந்த பஸ் வெளிக்கிட போகுது அறுநூறு படி ஏறுங்க மற்ற பஸ் காரரிட்ட சொல்லாதீங்க... டிக்கட் தரமாட்டன்... இப்பவே காச தந்திருங்க' என்பார் டமால்னு அவர் கைல தலா ஐநூற குடுத்திட்டு உள்ள ஏறிரணும்.

வெளில இருந்த பஸ்களின் இஞ்சின் சத்தம், வவுனியா... கண்டி... கொழும்பு... திருகோணமலை... என்ற கண்டக்டர்களின் கூவல் சத்தம், புறப்படும் பஸ்களின் ஹார்ண் சத்தம் இத்தோட நாம பேரம் முடிஞ்ச அமளில கெக்கே பிக்கேன்னுட்டு  உள்ள போனா உள்ளருக்கற மத்தவங்க 'யார்றா இவனுங்க பிந்தி வர்ரானுங்க பஞ்ஷுவாலிட்டி தெரியாத பயபுள்ளங்க'ன்ற மாரியே நம்மள பாப்பாங்க.

நம்ம சீட்ல ஒக்காரவும் பஸ் புறப்படவும் டிவில படம் ஓடவும் சரியாயிருக்கும்.

இப்படியான நாட்களில் அருகில் அமர்பவர் கலகலப்பானவராகவோ, சரளமாக பேசக்கூடியவராகவோ அமைந்துவிட்டல் அது வரம்.

மாறாக அவர் உம்மாஞ்சியாகவோ, வெரி டீசன்ட் வெட்டி பந்தா ஆசாமியாகவோ இருந்தால் சீட்டை சரித்து விட்டு லப்டப்பை ஆன்செய்து இயர்போனை காதில் போட்டு படம் பார்க்கவேண்டியதுதான் ஏனெனில் பெரும்பாலும் பஸ் டிவியில் ஓடும் படம் ஏற்கனவே பார்த்ததாகவோ அல்லது விஜய் படமாகவோ இருக்கும்.

ஒரு தடவை ஷூ அயன் பண்ண சேர்ட்டுலாம் போட்டு என்பக்கத்துல உக்கார்ந்த  வெரி டீசன்ட் நடுத்தரவயது ஆசாமி ஒருவர் பஸ் புறப்பட்டதுலருந்து அடுத்தநாள் காலை இறங்கும் வரை தூங்கி என்மேல விழுந்திட்டே இருந்தான். நான் ஒரு கையால அவன் என் மேல விழாதபடி புடிச்சிட்டே தாங்காம இரவுமுழுக்க பயணிக்க வேண்டியிருந்தது.

இன்னொரு தபா முன் சீட்டில் ஒரு அஞ்சுவிரல்லயும் மோதிரம் போட்டு பட்டு வேட்டி கட்ன டபுள் எக்ஸ்எல் சைஸ் ஒரு முதியவரும் அவர் மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

பஸ்க்குள் டிம் லைட் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

நடுச்சாமம் தாண்டியதும் பஸ்க்குள் இன்னொரு ஆட்டோ ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அந்த சத்தம் பஸ் இஞ்சின் சத்தமாக மாறியது. பின்னர் அது கார் இஞ்சின் சத்தம் வான் இஞ்சின் சத்தம் ன மாறி மாறி இறுதியாக ஏதோவொரு தொழிற்சாலையின் சத்தமாக தொடர்ந்தது.

பின்னிரவில் டீ குடிக்க இறங்கிய போது அது அந்த முதியவரின் குறட்டை என்பதை அறிந்து கொண்டோம்.

 அவர் மனைவி இறங்கி தண்ணீர் போத்தல் வாங்கிவந்து அவருக்கு கொடுத்தார். பஸ் கதவுக்கருகில் சிகரட் பற்றியபடி நிற ஒருவர் சொன்னார்

'ஒருநாள் இரவு நம்மாலயே தாங்கமுடியலயே பாவம் இந்த அம்மா, டெய்லி எப்டி தான் தூங்கறாங்களோ!'.

இன்னொருவர் சொன்னார்  'ஐயா தொண்டை வரண்டிருககும்னு தண்ணி குடுக்கறாங்க. குடிச்சிட்டு செக்கண்ட் இனிங்ஸ் ஆரம்பிபார்'.

இப்போது பஸ்ஸில் வந்தவர்கள் பெண்கள் உட்பட இந்த ஐயாவால் தமக்குள் அன்னியோன்னியமாகிவிட்டிருந்தனர்.

மறுபடி பஸ் புறப்பட்டது அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஐயா இடிமின்னலை ஆரம்பித்தார். 

இதுவரை மற்றவர்கள் என நினைப்பார்களே என பேசாமல் வந்த சக பயணிகள் லைட் ஆஃப் செய்ததும் சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்தனர்.

பின்னாலிருந்த இளைஞன் ஒருவன் 'ஐயா இப்போ பூபாள ராகத்துல பொழந்து கட்டறாரு என்றான்'

இன்னொருவன் கொஞ்சம் அடிதடி ஆசாமியாருப்பான் போல 'களிமண்ண எடுத்து அந்தாளு வாய்ல அடைங்கப்பா! எங்கிருந்து சத்தம் வருதுன்னு பாப்பம் என்றான்'

முன் சீட்டுக்கருகில் இருந்தவர்கள் திடீரென மூக்கை பொத்தினார்கள். ஒரு பெட்ஷீட் போர்த்திய கன்னி ஒன்று 'கண்டக்டரண்ணா ஏசிய கூட்டுங்க ப்ளீஸ்' என கூவியது.

பஸ்ஸின் நடு பக்கம் இருந்த எமக்கு அந்த ஐயா, வாயால் மட்டும் குறட்டை விடவில்லை என்பது மட்டும் புரிந்தது. நமது நண்பன் ஒருவன் சத்தமாக 'நீங்க ஐயாக்கு வாய்ல களிமண் அடைஞ்சாலும் சத்தம் வரும் ஓய்..! அதுக்கு தான் பர்ஸ்டு வார்ணிங் குடுக்கறார்' என்றான்.

மறுநாள் அதிகாலை...
அவரது மனைவி தூக்கத்திலிருந்து எழுந்தார்(இப்போது நல்ல வெளிச்சம் என்பதால் அவர்கள் முகங்களை பர்க்க முடிந்தது) சகஜமாக தன் காதுகளிலிருந்து இரண்டு பஞ்சுகளை எடுத்து கைப்பையினுள் வைத்தார்.
அட! இபடித்தான் டெய்லி தூங்குவாங்களோ என ஆச்சரியப்பட்டோம். பரவால்ல போன ஜெமத்துல என்ன பாவம் செஞ்சாங்களோ!

அடுத்து எழுந்த முதியவர் தானும் ரெண்டு பஞ்சுகளை தன் காதிலிருந்து எடுத்து போட்டார்(அடங்கொன்னியா! உன் குறட்டை சத்தம் உனக்கே கேக்காம தான் தூங்குனியா)

அந்த ஐயா ஹொட்டஹேனா வந்ததும் இறங்குவதற்கு ஆயத்தமானார். பின் சீட்டிலிருந்த ஒருவர் 'நைட்டு ஃபுல்லா மிமிக்கிரி செய்து என்டர்ட்டெய்ன் செய்த ஐயா இறங்க போராரு எல்லாரும் கைதட்டுங்க என்றார். அவரோ யாரோ யாரையோ சொல்லுகிறார்கள் என்பது போல முகத்தை வைத்திருந்தார்.

அவர் இறங்கும் போது 'ட்ரைவர் அடுத்த வாட்டி இவர பஸ்ஸுல ஏத்தாதீங்க பஸ்ஸ இவர் வாய்லயே ஏத்துங்க' என்றான் யாரோ ஒருவன்.

இன்னொரு நாள் பயணத்தில் அருகில் அமர்ந்தவர் ஒரு இளைஞன் சொந்தமாக பட்டா குட்டி யானை வாகனம் வைத்திருப்பவனாம். இலங்கையின் பல பாகங்களுக்கும் காய்கறிகள் சப்ளை செய்பவராம்.பெயர் பார்த்தீபன். ஆள் பாக்க இளிச்ச வாய் மாதிரி இனசன்டாக 'யார் பெத்த புள்ளயோ'ன்ற மாதிரி இருந்தான். அவர் சொன்ன சம்பவம் இது.

வழியில் ஓர் சாலை பிரிகிறது, அதை காட்டி 'இங்கு தான் நடந்து!' என ஆரம்பித்தான்.

இவரும் குட்டியானை ட்ரைவரும் நண்பர்களுடன் காய்கறிகளை இறக்கிவிட்டு புத்தளத்துக்கருகில் வந்து கொண்டிருக்கிறார்கள் ட்ரைவர் 'தூக்கம்வருது, இந்த இடம் பயங்கரமானது போலிருக்கு, பக்கத்துல ஏதாச்சும் யாழ்ப்பாண நம்பர் வாகனம் நிண்டா நாமளும் நிறுத்தி தூங்கிட்டு போலாம்' என சொல்ல ஓரிடத்தில் யாழ்ப்பாண இலக்கத்தகடுடைய லாரியை கண்டு அதனருகில் நிறுத்துகிறார்கள்.

அந்த லாரிகாரரோ தாம் இதுவரை இங்கு தூங்கிவிட்டதாகவும் நீங்களும் தங்கி வாருங்கள், இடம் பயமில்லை, நாம் புறப்படுகிறோம் என கூறி புறப்பட்டு செல்கிறார்கள். குட்டியானை பார்த்தீபனுக்கு வாகன லீசிங் கட்டவேண்டிய தேதி நெருங்கிகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு முறை காய்கறி சப்ளை செய்த பணத்துக்கான செக் வங்கியில் திரும்பிவிட்டது. யாழ்ப்பாண தமிழன் என்ன கிறுக்கனா என பேசிக்கொண்டிருந்து விட்டு வாகனத்துக்கு கீழே விரிப்பை விரித்து தூங்க ஆயத்தமானார்கள்.

அருகில் சிகரட் பிடிக்க என போன ட்ரைவர் திரும்பிவந்து 'பார்த்தீபன்ணே! பாத்தீங்களா அங்க எலக்ட்ரானிக் கடைய என்னமா மெய்ன்டென் பண்றாங்க நம்மூர்ல இப்டி இல்லயே' என கூற அவன் காட்டிய பக்கம் ஓர் எலக்ரானிக் கடை வெளிப்புறம் கண்ணாடி சுவரால் உள்ளேயும் வெளியேயும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

பார்த்தீபனுக்கு அதை பார்த்ததும் லீசிங் ஆபிஸ் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

உள்ளே டிவிகள், மியூசிக் ஐட்டம்கள், டிவிடி ப்ளேயர், ஹிந்தி பட சிடிகள், மிக்ஸி, வாஷிங்மெஷின் இன்னும் சில என்னண்ணே தெரியாத எலக்டானிக் ஐட்டங்கள் காட்சியறையில் இருக்கின்றன.

காய்கறி இறக்க உதவிக்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவன் ட்ரைவரிடம் சிகரட்டை வாங்கி பற்ற வைத்த படியே(பேசிக்கலி அவனுக்கு தம்மடிக்கும் பழக்கம் இல்லையாம்) பிரதான சாலையிலிருந்து கடையருகில் சென்று நோட்டம் விடுகிறான். 

வாகன புழக்கம் இல்லாத பகுதி.
 திரும்பி வந்து அந்த டிவிய எடுத்து தாறன் யாழ்ப்பாணத்தில கொணந்து எனக்கு தரோணும் என ட்ரைவரிடம் கூறிவிட்டு உங்களுக்கு என வேணும் என பார்த்தீபனை கேட்கிறான்.

'ஒரேயொரு டிவிய கொண்டுபோய் என பண்றது, எல்லா டிவியையும் ஏத்துவம்'

அடுத்து குட்டியானை அந்த கடையடிக்கு நகர்கிறது.

ஒருவன் கூரைமீதேறி அந்த மஸ்கனைட் சீட்டை வாகன சாவியால் கழட்டி உள்ளே இறங்க சதுரவடிவ அலங்கார தட்டுகள் அவற்றிலேயே யூ பல்ப்புகள் மாட்டப்பட்டிருககும் அதை மேலேயிருந்து கையால் தூக்கினா அப்டியே வந்திடுச்சாம் அந்த சதுர வடிவ துவாரத்துக்குள் இறங்கி மேசையை துவாரத்துக்கு நேரே போட்டுவிட்டு உள்ளிருந்து ஒருவர் மேலே கொடுக்க துவாரத்திலிருப்பவன் வாங்கி கூரையிலிருப்பவனிடம் கொடுக்க அவன் எஞ்சின் ஸ்ரார்ட் செய்யப்பட்ட நிலையிலுள்ள வாகனத்திலிருப்பவனுக்கு கொடுக்க வாகனம் நிம்பியாயிற்று.

 அனைவரும் வந்தாயிற்று ட்ரவர் டென்ஷனில் தம்மடித்தபடியுள்ளார். புறப்பட வேண்டியது தான் பாக்கி. (விதி!)

நில்லுங்கண்ணே வாரேன் என இறங்கி ஓடிய நண்பன் ஒருவன் தனியாக உள்ளே போய் அங்கிருந்த சுழல கூடிய கதிரையை தூக்கி கூரையிலிருப்பவனிடம் கொடுக்க முயல அது துவாரத்துள் நுளைய மாட்டேன் என்கிறது பார்த்தீபனோ மேலிருந்து 'கதிரை கிடக்கட்டும் வாடா யாரும் வந்திட போறாங்க' என்கிறான்.

அந்த நேரம் கடை ஓணரும் அவன் நண்பன் ஒருவனும் அவ்வழியால் மோட்டார் பைக் ஒன்றில் வந்தவர்கள் இதை கண்டுவிட்டு 'எங்க கடை கதிரை' என சிங்களத்தில் கத்துகிறார்கள். உள்ளே மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டதால் ஏனய பொருட்கள் போனதை காணவில்லை.

இவர்கள் பயந்தாலும் கடை ஓணர் இவர்க நோக்கி வருகிறான். பார்த்தீபனும் நண்பனும் மட்டுமே கடையருகில் மற்றவர்கள் தயாராக வாகனத்துக்குள். கடை ஓணரின் நண்பன் யாருக்கோ அனேகமாக போலிசுக்கு போன் செய்கிறான்

பார்த்தீபனும் கடை ஓணரும் ஏதோ பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக ட்ரைவர் வண்டிக்குள்கிடந்த ஏதோவெரு பொருளால் கடை ஓணரை தாக்க ஆரம்பிக்க அவர்கள் பைக்கில்  ஏறி புறப்பட இவர்களும் வாகனத்தில் புறப்படுகிறார்கள்.

எபடியும் அவர்கள் ஊர் மக்களை கூட்டிககொண்டு நம்மை தேடுவது உறுதி என்றவாறே வாகனம் செல்கிறது.
டாட்டா பட்டா குட்டியானை வாகனம் வேகம் 45கிமீ தாண்டி ஓடுவதே அபூர்வம்.

போய்க்கொண்டிருக்க அடுத்த சந்தியில் மூன்று மோட்டார்வண்டி கூடவே கடைக்காரனின் நண்பனும் அவன் இவர்களை அடையாளம் காட்ட பின்தொடர்கிறார்கள்.

சிறிது நேரத்தில் கடைக்காரனும் இன்னும் ஏழெட்டு மோட்டார் வண்டிகளும் சூழ்கிறது.

பார்த்தீபன் மற்ற நண்பர்களிடம், 'அவர்கள் இன்னும் பத்து நிமிடத்துக்குள் நம்மை சுற்றி வழைத்து விடுவார்கள்'

ட்ரைவர் 'முன்னுக்கு மேட்டபைக் வந்தா ஒரே ஏத்து தான்'

நண்பன் ஒருவன் வண்டியின் பின்புறம் நின்றவன்  உள்ளே கிடந்த டிவிடி ப்ளேயரை பின்தொடர்ந்த வாகத்தை நோக்கி வீசுகிறான்.

இப்போது உற்சாகமான பார்த்தீபன் 'பிடிபட்டா அவங்கட சாமான் ஒண்டும் உள்ள இருக்க கூடாது ஒரு நட்டு கூட இல்லாம தூக்கி வீசுங்க'என கத்த,

டிவி, ரேடியோ, கிரைண்டர் என வீதியில் அருகிலுள்ள வீடுகளில் பாலத்தில் மாறி மாறி விழுகிறது. சில பைக்குகள் இவர்களை முந்தி பாதையை மறித்து சென்று கொண்டிருக்கிறது. செய்த வேலையை விட ஓணரையும் தாக்கியமையால் இவர்களிடம் பிடிபட்டால் சங்கு நிச்சயம்.

வண்டி காலியானதும் பார்த்தீபன் வண்டிக்குள்ளிருந்த இரும்பு சாவியால் முன் கண்ணாடியை நொருக்குகிறான்.

அருகிலிருந்த பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து வண்டியை நிறுத்துகிறார்கள்.

பொலிசிடம் ஓணர் நீண்ட நேரமாக ஏதோ சிங்களத்தில் சொல்கிறான். பார்த்தீபன் யாழ்ப்பாணத்திலிருந்த யாருக்கோ போன் செய்துவிட்டு போலிசார் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வண்டி சாவியை போலிசிடம் கொடுத்துவிட்டு ஜெயிலில் உட்காருகிறார்கள்.
நேரம் இரவு மூன்று மணி இருக்கும்

மறுநாள் மதியம் யாழ்பாணத்திலிருந்து நண்பனும் ஒரு வக்கீலும் வந்திருந்தனர். வக்கீல் இவர்களுடன் பேசுகிறார்.
மதியமே இவர்களை துணியால் மூடி ஜீப்பில் ஏற்றி கோர்ட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.

இவர்கள் கூண்டில் நிற்கின்றனர்.

ஆங்கிலத்தில் வழக்கு நடைபெறுகிறது. 

தீர்ப்பில் கடை ஓணர், பார்த்தீபனுக்கு நாற்பத்து ஐந்தாயிரம் ரூபா கொடுக்க வேண்டும் என கூறி இவர்கள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் வக்கீல் ஆங்கிலத்தில் கோர்ட்டுக்கு சொனது என்னன்னா...

'குற்றம் சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் மரக்கறி ட்ரான்ஸ்போர்ட் பணிகள் முடித்து திரும்பிகொண்டிருந்த போது பொது இடத்தில் சிகரட் பிடிக்காமல் ஒதுக்கு புறமாக வண்டியை நிறுத்தி சிகரட் பிடித்திக்கிறார்கள். 

அதற்கு முதல் யாரோ அந்த இடத்திலிருந்த இவர்களது கடையில் களவாடிவிட்டு தப்பி சென்றுள்ளார்கள், அல்லது இவர்களே களவுபோனதாக நாடகமாடலாம். அங்கு வந்த கடை ஓணர் எமது கட்சிகாரரை தாக்கி வாகன கண்ணாடியை நொருக்க சற்றும் எதிர்பாராத நம் கட்சிகாரர், இவர் நடுசாமத்தில் வழிப்பறிக்காக நம்மை தாக்குவதாக நினைத்து ஓணரை திருப்பிதாக்கியுள்ளனர். 

ஏனயவர்களும் கூட்டாக வெறிகொண்டு துரத்த ஆரம்பிக்கவே உயிரைகாப்பாற்ற வாகனத்தில் தப்பித்து தம் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்தில் புகுந்து நீதி கேட்டுள்ளனர்.

ஏதோ பொருட்கள் காணாமல் போனதாக கூறும் கடை ஓணருக்கு எமது அனுதாபங்களை தெரிவிப்பதோடு, தற்பாதுகாப்புக்காக தாக்கியதால் ஏற்பட்ட காயத்துக்கு மன்னிப்பு கேட்பதோடு, நீங்கள் நொருக்கிய எம் வாகன கண்ணாடிக்கான பணத்தை பெற்று தருமாறு தாழ்மையாக வேண்டுகிறோம்'

இந்த கதையை அருகிலிருந்தவன் சொல்லி முடித்திருந்தான்.
இப்போது அவனை பார்க்க 'நீயாடா இந்த காரித்த பண்ணே' என்பது போல இருந்தது.

பயணங்கள் பலவித மனிதர்களை சந்திக்கவைக்கிறது.
விந்தையான மனிதர்கள், வித்தியாசமான உணவுகள், மற்றவர்களது மத சம்பிரதாயங்கள், கலாசாரம் தாண்டிய ஆடைகள் இவற்றை அறிய முற்படாமல் தொடர்ந்தும் ஒரேமாதிரியே வாழவிரும்பின் வெளியில் செல்லாமல் வீட்டிலிருப்பதே சிறந்தது.

நாளை மற்றொரு நாளே!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, September 1, 2014

ஆவிகளுடன் பேசுவது எப்படி?- 2


இந்த சம்பவம் நடைபெற்றது சில காலங்களுக்கு முதல் ஆகும்.

வேலை நிமிர்த்தம் நண்பர்களுடன் தனியாக ஓர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.
அந்த கால நாற்சதுர வீடு. வீட்டுக்குள்ளேயே முற்றம். ஒருஅறையில் மரப்படிக்கட்டுகள் ஏறிபார்த்தால் மேலே பரண் அதில் பழைய தட்டு முட்டு சாமான்கள். 

பகலில் நிறையபேர் வந்து போனாலும் இரவுகளில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே தங்கி நிற்பது வழக்கம். ஹாரர் மூவி செட் மாதிரியே இருக்கும். 


வீட்டுக்கு முன்னாலேயே கொக்குவில் மார்க்கெட் இருந்ததால் அங்கு கொண்டுவந்து விடப்படும் அநாதை பூனைக்குட்டிகளும் எம்முடனே தங்கும்.

பெரும்பாலும் நடுசாமம் தாண்டியும் பேசிக்கொண்டிருப்போம்.
இரவு இரண்டு மணிக்கு இரணுவ்தினர் ரோந்து செல்வார்கள்.
அதிகாலை மூன்று மணி ஆனால் அருகிலுள்ள பாண் பேக்கரிக்கு போய் கறி பணிஷ், ஜாம் பணிஷ் ஏதாவது வாங்கிவந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.
நான்கு மணிக்கெல்லாம் அன்றய தினசரி பத்திரிகைகள் எம் வாசலில் போட்டுவிட்டு போவார்கள் அருகிலுள்ள கடைக்காரருக்கு வரும் ஆடர் அது. கடைவாசலில் போட்டால் ஏழுமணிக்கு கடைகாரர் வருவதற்குள் களவாடிவிடுவார்கள் என்பதால் நம் வீட்டிற்குள் போட்டுவிட்டு போவார்கள். அந்த பத்திரிகை கட்டுகளிலிருந்து ஆளுக்கு ஒவ்வொன்றை எடுத்து படித்துவிட்டு மறுபடி சொருகி வைத்து விட்டு தூங்கிவிடுவோம். சில நேரங்களில் மறுபடிவைக்காமலே கடைக்காரர் எடுத்து போய் விடுவார்.

காலையில் எட்டுமணிக்கு வேலைக்கு வரும் பையன் நம்மை எழுப்பி திறப்பை வாங்குவான்.

இப்படியான இரவுகளில் ஒருநாள் ஆவிகளை பற்றிய பேச்சு வந்தது. 
அங்கு வந்து போகும் ரவி என்பவனுக்கு முன்னொருநாள் க்ரவுண்டில் விளையாடும் போது ஆவி ஒன்று அவன் உடலில் புகுந்ததாகவும். அதனால் அவன் வினோதமாக நடந்துகொண்டதாகவும் நண்பர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குள் தூக்கிசெல்ல முயன்ற வேளை முருகன் என் எதிரி நான் உள்ளே வரமாட்டேன் என கத்திவிட்டு மயங்கியதாகவும் கூறினார்கள். அவனோ தனக்கு மயங்கியதை தவிர எதுவும் நினைவில்லை என்றான். பிறகு தனியாக ஒருநாள் என்னிடம் ஆவி புகுந்ததற்கான காரணம் என ஒரு சம்பவத்தை கூறினான் அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

அன்றிரவு மற்றவர்கள் தூங்கியதும் இணையத்தில் ஆவிகளுடன் பேசுவது எப்படி என ஆங்கிலத்தில் தேடி ஔஜா பலகை என்ற வழிமுறைபற்றி அறிந்து மற்றவர்களுக்கு காட்டினேன். 

அது என்னான்னா ஒரு பெரிய்ய மட்டயைில் A-Z  வளைவாக எழுதப்பட்டு கீழே எண்களும் இடப்பட்டிருக்கும். மேலே சூரிய சந்திரர் படங்களுடன் ஆம் இல்லை என இருக்கும்.
இதில் ஒரு கண்ணாடி டம்ளரை இருவர் அல்லது மூவர் தொட்டபடி ஆவிகளிடம் கேள்வி கேட்க தேவையான எழுத்துகளின் மேல் டம்ளர் நகர்ந்து பதில் வரும்.

இதை செய்யும் போது இரவு நிசப்தமாக இருக்க வேண்டும்.

ஒற்றை மெழுகுவர்த்தி வௌிச்சம் மட்டுமே இருக்கவேண்டும்.

பேசிக்கொண்டிருக்கும் போது ஆவி சம்மதித்து குட் பாய் சொல்லி போவதாக கூறாமல் நாமாக இடையில் விலகினால் அது அங்கேயே யாரிலாவது தங்கிவிடும்.

ஆவி அடம்பிடித்தால் அவரவர் மத கடவுளின் ஜெபம், தேவாரம், தொழுகை ஏதாவது செய்ய வேண்டும்.

ஆல் கண்டிஷன்ஸ் அப்ளையுடன் இந்த பலகையை மறுநாள் பன்னிரண்டு மணிக்கு செய்வதென முடிவுசெய்யப்பட்டது.
வழக்கமாக எம்முடன் நிற்கும் இருவர் விஷப்பரீட்சைக்கு பயந்து அன்று வரவில்லை. இதை கேள்விப்பட்டு புதிதாக மூன்று நண்பர்கள் எம்மோடு இரவு நிற்பதற்கு வந்திருந்தார்கள்.

12மணிவரை சீட்டாடுவோம் என உக்கார்ந்தோம்.
நாம் தூங்கும் அறையில் கட்டில் ஒன்று அருகில் பெரிய மின்விசிறி ஒன்று அதை ஆன்செய்தால் புயலடிப்பது போல இருக்கும்.
மல்ட்டி ப்ளக்கில் விதவிதமான போன் சார்ஜர்கள் கட்டிலிலேயே பிசியாக இருக்கும். மேஜையில் லாப்டாப்கள், ஸ்பீக்கர். வைஃபை, நாய் பிஸ்கட், அருகில் ஒரு முயல் கூடு, சீடி தட்டு அன்ட் சீட்டு கட்டு.


'முதல்முறை பார்த்த ஞாபகம் மனதினில் தந்து போகிறாய்...' பாடல் அறை ஸ்பீகரில் ரண்டமாக தொடர்ந்து ஒலிக்கிறது சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.

இரவு பதினொரு மணி. 

அன்று தான் கேகேஎஸ் வீதிக்கு புதிாக கார்ப்பெட் போட்டு வாகனங்கள் போகாதபடி ஒருபுறம் தார்பீப்பாய்களை அடுக்கி டேப் கட்டியிருந்தார்கள். எனவே வாகனங்கள் வராது என்பதால் என் பைக்கை வாசலில் வீதியிலேயே நிறுத்தியிருந்தேன்.
நாம் விளையாடுவது சீட்டில் 532 என்ற ஐட்டம். 

வெல்லபோகும் தருணம் அந்த பாடலை உரக்க பாடியபடி விளையாடிக்கொண்டிருக்க தெருவில் 'தடால்!' என்ற ரெுஞ்சத்தம் கேட்டது.
கட்டிலிலிருந்து அனைவரும் பாய்ந்து சென்று பார்த்தால் ஆட்டோ ஒன்று புரண்டு போய் கிடக்கிறது.

இரண்டு அடி இடைவெளியில் என் பைக்(ஜஸ்ட்டு மிஸ்ஸாகியிருந்தால் காய்லாங்கடைக்கு போட்டிருக்கவேண்டியதுதான்). தார் பீப்பாய்கள் உருண்டு கொண்டிருந்தன. நான் வீட்டுக்குள்ளே சென்று முகப்பு லைட்டை ஆன் செய்து விட்டு வந்து பார்த்தால் ரவியும் மற்ற நண்பர்களும் ஆட்டோவை நிமித்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டோ அப்பளம் போல் நொருங்கி கிடக்கிறது, ஆட்டோ நிமிர உள்ளேயிருந்துஇரு உடல்கள் தெருவில் விழுகிறது. ஒருவனின் தலை முற்றிக பிளந்து ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது மற்றவனது கால்கள் உடைந்து போயுள்ளது.

ரவி உள்ளே போய் சீட்டாட விரித்திருந்த துணிகளை எடுத்துவந்து அடிபட்டவன் தலையை சுற்றி கட்டுகிறான். அவர்களோ இரத்தம் வருவது கூட தெரியாதளவுக்கு போதையில் இருக்கிறார்கள். கால் முறிந்தவன் வீதியில் கிடந்தபடியே மற்றவனை பார்த்து 'மச்சான் கலையனாகபோகுது எழும்பு போவம்' (அவன் ஆல்ரெடி போய்ட்டான்)என்றுவிட்டு நம்மை பார்த்து 'அண்ணை என்ன ஒருக்கா கழுவி ஆட்டோ டரைவர் சீட்ல இருத்தி விடுங்கோ' என்கிறான்.

இதற்குள் சனம் திரண்டுவிட்டது.
நாம் ஆம்புலன்ஸக்கு போன் செய்தால் அவர்கள் ஆர அமர அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார்கள்.

அடுத்து வந்த ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பவும் போலிஸ் வரவும் சரியாகவிருந்தது.
இவர்களை மோதிய வான் சிறிதுதூரம் தள்ளி நின்று இன்சூரன்ஸ் ஏஜன்டை வரவைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்.
போலிசார் அவசரத்தில் ஆக்ஷிடன்ட் ஆன் ஆட்டோவை இன்னொரு பட்டா குட்டியானையில் ஏற்ற முயல அது உள்ளே நுளைய மாட்டேன் என்றது ஓர் இரும்பு கம்பியை எடுத்து நாலாபுறமும் அடித்து சப்பையாக்கி நுளைத்து கொண்டு புறப்பட்டார்கள்.
ஏற்கனவே வீதி திருத்த வேலைகளால் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு விட்ட சாலையில் விபத்தும் சேர ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் உருவாகிவிட்டிருந்தது.

இந்த களோபரத்தில் அடிபட்டவர்களின் செல்போனிலிருந்து ஆட்டோ பற்றறி வரை அங்கு வந்த சிலர் ஆட்டையை போட்டிருந்தார்கள்.
முன்னால் சந்தை கட்டட வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து ஸ்ரேடியத்தில் மேச் பார்ப்பது போல இவற்றை பார்த்து கொண்டிருந்தார்கள்.

பாதை சகஜமாக இரவு ஒன்றரை ஆனது
நாம் நமக்குள் எதுவும் பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 

ஹாஸ்பிட்டல் போனவர்களுக்கு என்னாயிற்று என யோசித்தபடி இருக்க அதிகாலை நான்கு மணி அன்றய பத்திரிகைகள் வந்தது.
அதில் போட்டோவுடன் இந்த செய்தி வந்திருந்தது. ஒருவர் வரும் வழியில் இறந்து விட்டதாகவும் மற்றவர் படுகாயம் எனவும் விபத்து படத்தின் பின்னணியில் நம் வீடு. 

இறந்தவனிடம் கடைசியாக பேசி அவனுக்கு தலையில் துணி சுத்தி தண்ணீர் தெழித்தது ரவிதான்.

மறுநாள் இரவும் ஆவியுடன் பேசிபார்ப்போம் என்று 12மணிவரை வீட்டின்பின்புறம் காத்திருந்தோம். 

மற்றவர்களுக்கு உள்ளுக்குள் உதறினாலும் இதல்லாம் நடவாத காரியம் என எம்மை கலாய்த்து கொண்டிருந்தார்கள். 

அந்த நேரம் நானும் விது என்பவனும் திட்டமிட்டு தண்ணீர் போத்தல் எடுப்பதாக கூறி அங்கிருந்து வந்து வீட்டின் ஃபியூஸை புடுங்கிவிட்டு கூரை மேல் கற்களை எறிய நம்மை கலாய்த்தவர்கள் அலற ஆரம்பித்தார்கள். 

மீண்டும் கரண்டை கனக்ட் செய்து விட்டு அவர்களை பார்த்த போது மாறிமாறி கட்டிப்பிடித்தபடி இருந்தார்கள் போனில் சத்தமாக அம்மன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடுத்து ஒளஜா பலகையை தயார் செய்து மேஜைமீது வைத்து டீ குடிக்கும் டம்ளரை எடுத்துவந்து லைட் ஆஃப் செய்து மெழுகுவராத்தி ஏற்றி நானும் ரவியும் விதுவும் டம்ளரில் கைகளை வைத்து 'யாராவது இருக்கீங்களா?' என விது கேட்க பலத்த நிசப்தம்.
நான் கையை வைத்திருந்ததன் நோக்கம் அது தானாக நகருமா இல்லை இவர்கள் யாராவது நம்மை கலாய்க்க நகர்த்துவார்களா என பார்க்கவே! அப்படி நகராவிட்டால் நானே நகர்த்தலாமென உத்தேசித்திருந்தேன் தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தான். எந்த மூமென்டும் இல்லை

மெழுகுவர்த்தி உருகிகொண்டிருக்கிறது... 

மற்றயவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார்கள்... 

விது தமிழ் ஆங்கிலம் என மாறி மாறி அதே கேள்வியை கேட்டுகொண்டிருக்க, டம்ளர் நகர ஆரம்பித்தது கடிகாரத்தில் நிமிடமுள் நகரும் வேகம். ஒரு எழுத்தைதாண்டிய பிறகே அது நகர்ந்திருப்பதை ஊகிக்க முடியும்.
ஆம் என்ற பகுதியில் டம்ளர் வந்து நின்றது. 

ஒரு மெழுகுவர்த்தி முடிந்து அடுத்ததை ஏற்றினார்கள். அடுத்து 'உங்க பேரென்ன?' என யாழ்ப்பாண தமிழ், இந்திய தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மாறிமாறி கேட்டு பார்த்தான் டம்ளர் நகர்வதாக காணோம்.

நான் பொறுமையிழந்து கையை எடுத்து விட்டேன். 

நீண்ட காத்திருப்புக்குபிறகு முடிப்பம் என கூறி தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாணாடு எல்லாம் பாடி விட்டு மற்றவர்களும் கையை எடுத்தார்கள். 

விது அன்ட் ரவியை பார்த்தால் இவர்களுக்கு தேவாரம் என்று ஒரு ஐட்டம் இருக்குன்னு தெரியுமாங்கற மாரி இருக்கும். ஆனா கரக்ட்டா அதல்லாம் மனப்பாடம் பண்ணி நடுச்சாமத்துல பாடிருக்கானுங்க.

என்னுடைய டவுட் : டம்ளர் தானா நகர்ந்ததா இல்ல இவனுங்க கையால தள்ளினானுங்களா?

ரவின்ட டவுட்: வந்தது ஆட்டோல வந்தவன் ஆவியா? அது போயிடிச்சா இல்ல இங்கயே தங்கிடுச்சா?

விது டவுட்: நான் பேசினது ஆவிக்கு சரியா புரியலயோ? சிக்னல் வீக்காருக்குமோ?

மற்ற நண்பர்களுடைய டவுட்: இவனுங்க கிறுக்கனுங்களா? இல்ல நம்மள கிறுக்கனாக்கறானுங்களா?

மறு நாள் இரவு எடுத்த வீடியோவ பாத்த மத்த நண்பர்கள் சொன்னானுங்க மச்சான் அடுத்த வாட்டி பொம்பள பேய்ங்கள கூப்டு பேசுங்க. நாங்களும் பாக்க வாரோம்(ங்கொய்யால பேய்ல கூடவா!!!?)


இங்க Comment பண்ணுங்கப்பா...!

காளை மாட்டில் பணம் கறப்பது எப்படி? Based On A True Story

இடம்- அவுஸ்ரேலியா, நிறம்- கறுப்பு, மதம்- இல்லை, இனம்- பிரேசியன், பிறந்த திகதி- தெரியாது ஆனா சுகப்பிரசவம் தான்.

அவுஸ்ரேலியாவில் ஓர் அழகான குழந்தை பிறக்கிறது. டாக்டர் கண்ணாடியை கழற்றியபடியே பிரசவம் பார்த்தவர்களிடம் கூறுகிறார் 'சிங்கக்குட்டி பொறந்திருக்கான்...!' என்றபடி தன் டெலிவரி சார்ஜ் ரசீதை கௌ பாயிடம் நீட்டுகிறார்.

நாள்முழுவதும் ஓரே மேனியுடனும், பொழுதெல்லாம் ஓரே வண்ணத்துடனும் தன்சகோதரங்களுடன் பால்குடித்துவரும் காலப்பகுதியிலே தாயிடமிருந்து மகனைபிரித்து ஓர்பெரீய்ய கப்பலில் ஏற்றி அவுஸ்ரேலியாவைவிட்டு நாடுகடத்துகிறார்கள். 

ஷிப்பிங் சார்ஜ் இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க கொபாய்யின் வங்கிகணக்கில் மகனை விற்ற காசு வரவு வைக்கப்படுகிறது.

நடுக்கடலிலும் சாப்பாட்டுககு குறையில்லை. சுத்தவர இனசனத்துடன் ஜாலியாக சென்றுகொண்டிருக்கும் கப்பல் இலங்கையை அடைகிறது. இலங்கையிலும் எந்தகுறையுமின்றி கழிகிறது இளமைக்காலம். 

இப்போது அவர் ஒரு கட்டிளம் காளை. ஆனால் கண்ணில் எந்த கன்னியையும் இதுவரை கண்டதில்லை. காதல் அரும்பும் வயதில் தன்னையொத்த காளைகளுடனே நாட்கள் கழிகிறது.

கொழும்பிலிருந்து கண்டைனர் லாரியில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்படுகிறார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள விவசாயதிணைக்களத்தில் தங்கவைக்க படுகிறார். இங்காவது பசுமாடுகளை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

 சில அதிகாரிகளின் அரியமுயற்சியில் (அதாவது உயிரணுக்கள் இவரது அனுமதியில்லாமல் ருத்பேஸ்ட் பிதுக்குவது போல பிதுக்கி எடுக்கப்படுகின்றது) இவர் வயதுக்கு வந்துவிட்டமை உறுதிப்படுத்தப்படுகிறது.

அன்றிலிருந்து காலையும் மாலையும் இருவர் காளைமாட்டிலும் பால் கறக்கும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்த நபர்களோடே குடும்பம் நடத்தவேண்டிய நிலைக்கு ஆளாகிறார் மிஸ்டர் காளை.

இந்த நபர்களை பற்றி சொல்வதானால், அரசாங்கவேலை என ஐம்பதுலட்சம் சீதணம் அன்ட் வீடு வாங்கி அந்த காசில் பைக் வாங்கி காலையில் எழுந்து குளிச்சு, சாப்பிட்டு அயன் பண்ண சேட்டு, சப்பாத்து சகிதம் விவசாயதிணைககளத்துக்கு வந்து மாட்டுக்கு கைகளால் விந்து எடுப்பது இவர்கள் கடமை. இதற்கு மாதம் இருப்த்தைந்தாயிரம் சம்பளம் அன்ட் ஓய்வூதியம்.

நமீதாவின் தொடையையை விட பெரிய டெஸ்ட்டியூப் போன்ற றப்பர் குழாயுடன் சம்பவ இடத்தை தம் கைகளால் இருவரும் முயற்சித்து கூடவே மாடும் ஒத்துளைத்து பெறப்படும் விந்தணுகள் இரசாயணம் இடப்பட்டு குளிர்சாதனபெட்டியில் இலங்கையின் பல பாகங்களுக்கும் விற்கப்படும்.

'மச்சான்! தின்னவேலீல பெரிய மாடு நிககாம் வா பாப்பம்' என பலர் இவரை பார்த்து போகவந்தாலும் வெளியாட்கள் நிற்கிறார்களே என கொஞ்சங்கூட வெக்கமேயில்லாமல் தன் உயிரணுவை வாரிவழங்கும் வள்ளல் இவர்.

காலப்போக்கில் இதற்கு மேல் கறந்தால் இனி காற்று தான வரும் என்ற நிலமை உருவாக விவசாயதிணைக்களம் இவரை விற்க முடிவுசெய்தது. முஸ்லீம் பாய் ஒருவர் இரண்டு லட்சம் கொடுத்து வாங்கிபோனார். 

இதனால் இந்த மாடு முஸ்லீம் மதத்துக்கு மாறியது. ஏன்னா இந்து மாடாக இருந்தால் சைட்டிஷ்க்கு யூஸ் பண்ண முடியாதே!

வாங்கியவர் கமுக்கமாக காரியத்தை முடிக்காமல் பாரிய திட்டம் தீட்டினார். அங்கு தான் ஆரம்பித்தது அவருக்கு ஏழரை. 

இந்த மாட்டை கொக்குவில் பிரவுண்ரோட் சேர்ச்க்கு அருகில் அனைவரும் பார்க்க நடுவெய்யிலுக்குள் கட்டி உழவு இயந்திரத்தில் நாலு லோடு புல்லும் பறித்து அருகில் தகர மண்ணெண்ணெய் பீப்பாயின் வட்ட மூடி ஒன்றில் சோக் கட்டியால் இந்த உயர்ரக மாடு வருகிற ஐந்தாம் திகதி இறைச்சியடிக்கப்பட இருப்பதால் உங்கள் பங்குகளுக்கு இப்போதே முந்துங்கள் என எழுதி கூடவே தன் தொலைபேசி எண்ணையும் அடிச்சுவிட்டார்.

தமிழ்வாசிக்க தெரியாத மாடு இந்த சூதுவாது தெரியாமல் தான்பாட்டுக்கு புல்லு திண்டுகொண்டிருக்கிறது. முஸ்லீம் பாய்க்கு ஆடர்கள் குவிந்தது, கூடவே கோட் ஆடரும் வந்தது. 

என்னாச்சுன்னா யாழ் பல்களைகழக உடற்பயிற்சி பேராசிரியர் ஒருவர் இந்த மாட்டையும் போட்டயும் மாறிமாறி பாத்திட்டு கோட்டுக்கு இழுத்துவிட்டார். இப்போது மாடு நீதிமன்ற காவலில்...

வழக்கம் போல வழக்கை வருடகணக்காக இழுக்க கோர்ட் நினைத்தாலும் மாட்டை பராமரிப்பது பாரிய செலவாக இருந்தது ஏனெனில் இந்த ரக மாடுகள் சாதாரண மாடுகளை விட ஆறேழு மடங்கு தின்னும்.

இந்த வழக்கு பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் ஃப்ளாஷ் நியூஸ் ஆனது. உதயன் பத்திரிகை அடுத்த வழக்கு திகதி எப்போது என்பதையும் வழக்கு பார்க்க ஆர்வலர்கள் வருமாறும் அழைத்தது. இப்போ இந்த மாடு ஒரு பாப்புலர் ஸ்டார் ஆகிவிட்டிருந்தது யாழ்ப்பாணத்தில்.

அடடே! சமூக ஆர்வலரின் முயற்சியில் மாடு பொழச்சிக்க போவுதுனு இருந்த நேரத்தில் முஸ்லிம் பாய் தான் இரண்டரை லட்சத்துக்கு மாட்டை இறைச்சிக்கு வாங்கியதாகவும் தனக்கு எதிராக வழக்கு வைத்தவர் அந்த பணத்தை தனக்கு தந்துவிட்டு மாட்டை வீட்டுக்கு கூட்டிசெல்லட்டும் என கூற சமூக ஆர்வலர் வெலவெலத்து போனார். 

இவர் செந்தமாக உடற்பயிற்சிநிலையம் வைத்திருப்பவர் தன் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி திண்டா உடம்பு வைக்கும் என ஆலோசனை வழங்குபவர் அவரே இந்த மாட்டை பார்த்து இரங்கி காரியத்தில் இறங்கி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அடுத்து என்னசெய்வது என சிந்தித்த இவர் அருகிலிருந்த ஒரு அச்சகதுக்கு போய் ஐநூறு ரூபாக்கு பில்புத்தகம் ஒன்று பிரின்ட் செய்தார். 

யாழ்ப்பாண வர்த்தக சங்கத்திடம் அதை கொடுக்க வர்த்தக சங்கம் சார்பில் தலா ஐநூறு ரூபா படி அந்த பற்றுசிட்டு விற்று அந்த பணத்தில் யாழ் வர்த்தகர்கள் இந்த மாட்டை வாங்கினார்கள்.

பொதுவாகவே யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர்கள் வீடுகளில் பசுமாடுகள் பராமரிக்கும் வழக்கம் உடையவர்கள். சில மாடு வைத்திருப்பவர்களும் தமது மாடுகளுக்கு வர்த்தகர்களின் வீடுகளை இனங்கண்டு சென்றுவருமாறு பழக்கியுள்ளனர்.

தினமும் மாலையில் குறித்த நேரத்தில் தாமாகவே அந்த பசுமாடுகள் வீதியால் வாக்கிங் வந்து அவர்களது படலையில் நின்று 'ம்மே...!' என சவுண்டு விடும் வீட்டுகாரரும் தவிடு, கஞ்சி, இலைகுழை என தினம் ஒரு ஐட்டமாக கொடுப்பது வழக்கம்.(பின்னே அம்மாம்பெரிய்ய மாடு பிச்சகாரன் மாரி வாசல் வந்து நின்னா யாருக்கு தான் மனசு கேக்காது).

இந்த சம்பவத்துக்கு பிறகு எப்போது மாடு வாங்கினாலும் அந்த முஸ்லிம் பாய் ரெண்டு பெட்ஷீட்டை சுத்தி தான் கூட்டிச்செல்வார் என நினைக்கிறேன்.

இந்த வர்த்தகர்கள் வாங்கிய நம் கதாநாயகனை பராமரிப்பதற்கு தனிக்குழு அமைப்பது சிரமம் என்பதால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் இவர் இந்து மதத்துக்கு மாறுகிறார்.

அங்கு பிள்ளை வரம் வேண்டும் பக்தர்கள் இவருக்கு நாலு மூட்டை புண்ணாக்கு வாங்கி கொடுக்கலாம் என்ற செய்தி பரவவிடப்பட மக்கள் திரளாக அங்கு சென்றனர்.(ஆல்ரெடி அவர் பசுகளுக்கு பிள்ளை வரம்கொடுக்க தான் வெளிநாட்டுலருந்து யாழ்ப்பாணம் வந்தவர்). மாட்டுக்கு பக்கத்திலேயே ஒருபுறம் பில்போடும் கவுண்டர் வடக்கு பக்கம் புண்ணாக்கு களஞ்சியம் தெற்கு பக்கம் இன்னொரு புண்ணாககு களஞ்சியம்.

ஒருவர் போய் புண்ணாக்கு வாங்கிகொடுக்க பணம் கொடுக்கும் சமயம் அவரது கண்பார்வையில் நாலு மூட்டை புண்ணாக்கு அவரை கடந்து இருவரால் களஞ்சியத்துக்கு எடுத்து செல்லப்படும். அவருக்கு ஒரு பற்றுசீட்டு வழங்கப்படும்.

பிறகு அடுத்த நாள் பணம் கொடுப்பவர்களுக்கு அங்கிருந்து இந்த களஞ்சியத்துக்கு புண்ணாக்கு மூட்டை எடுத்து வருவது காண்பிக்கபடும்.

இவர் தின்ன தினமும் பத்து மூட்டை புண்ணாக்கு தேவை என காட்டிக்கொண்டாலும் இவர் தின்பது நான்கு மூட்டை ஊறவைத்த புண்ணாக்கு மட்டுமே!

பட் ஹீ இஸ் பேசிக்கலி வெரி வெரி லேஸி மான். பாக்க மலைமாரி இருந்தாலும் சிலை மாரிதான் நிப்பாரு சின்ன மூமென்ட் காண்றது கூட கஷ்டம்.

அங்கே இவருக்கென தனி பந்தல் போடப்பட்டது. சாணம் போட்ட அடுத்த செக்கன்டடே அதை துப்புரவுசெய்ய ஆட்கள் அமர்த்தப்பட்டார்கள்.
வரும் மக்கள் சுற்றுலா பயணிகள் இவருக்கு வாய்ப்பன், வடை, பாண் என கொடுக்க கோயிலில் பொங்கும் பக்தர்கள் பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம், மோதகம் என ஊட்டிவிட ஆரம்பித்தனர். இதைவிட இவருடன் செல்ஃபி எடுக்கும் நபர்களால் இன்ஸ்டக்ராம், பேஸ்புக், ட்விட்டர் என பிரபலமானார்.

இல்லறம் இனிதே(!) முடித்து தற்போது கீரிமலையில் துறவியாக வாழ்கிறார்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, August 13, 2014

கரும்பலகை குறும்படம் Karumpalakai Award Winning Short Film.

இயக்குனர் மெண்டிஸ் இயக்கத்தில் கவிமாறன் மற்றும் பலரது நடிப்பில் எனது எடிட்டிங் அன்ட் பின்னணி இசையில் உருவான குறும்படம் கரும்பலகை.


கன்டிகேம் எனப்படும் கேமராவில் மிக நீ......ண்ட ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டு ஃப்ரேம் பை ஃபரேமாக வெட்டி இருபது நிமிட குறும்படமாக எடிட் செய்தோம். 
2010ம் ஆண்டு வெளியவதற்கு சில நாட்களே இருந்தநிலையில் இரவு முழுவதும் சில நாட்கள்  எடிட்டிங் அன்ட் பின்னணி இசை வேலைகள் தொடர்ந்தது. இது கவிமாறனின் முதலாவது சினிமா பிரவேசமாக அமைந்தது. (பின்நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது திரைப்படத்தை கவிமாறனே இயக்கி நடித்திருந்தார்.)

இக்குறும்படம் பல விருதுகளையும் பெற்றுக்கொண்டது.
இதில் பணியாற்றிய அனைவருக்கும் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

பணியாற்றியவர்கள் - சத்திய மெண்டிஸ், கவிமாறன் சிவா, கிருத்திகன் .

குறும்படம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற சீரியஸ்னஸ் கொஞ்சம் கூட இல்லாமல் டேக் இட்  ஈஸி பாலிசியில் விளையாட்டுதனமாக படவேலைகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் விளையாட போன ஒரு சோம்பலான மாலையில்  வந்து சொன்னார்கள்...

'நீங்க செய்த கரும்பலகை Short Film அவார்ட் வின் பண்ணிடுச்சு'.

இதில் நடித்திருந்த  பெரியவர் தற்போது நம்முடன் இல்லை.


இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, August 11, 2014

இலவு குறும்படம் ப்ரோமோ பாடல்

பதிவர் கானா வரோ இயக்கத்தில் உருவாகிக்கொண்ருக்கும் இலவு குறும்படத்தின் ப்ரோமோ பாடல் அண்மையில் வெளியானது.

தர்ஷானன் இசையமைக்க பதிவர் இரோஷன் பாடல் வரிகளை தர்ஷானனுடன் இணைந்து எழுதியுள்ளார். வரிகளில் யாழ்ப்பாண பிரதேச வார்த்தைகளை ஹைலைட் செய்துள்ளார்கள்.

கவிஷாலினி பாடலை பாடியுள்ளார். ஸரூடியோ வர்ஷனாக வெளியாகியிருக்கும் இப்பாடலில் குறும்படத்தின் சில காட்சிகளும் ஒளிபதிவாளர் நிரோஷ்ன் கைவண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 

வரோவின் இயக்கத்தில் படம் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு இசை கொழும்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது பாடல்.

இந்த படைப்பில் வரோவுடன் பணியாற்றிய தருணங்கள் மறக்கமுடியாதவை யாழ்ப்பாணத்தில் ஷூட்டிங் கொளும்பில் எடிட்டிங் என ஓடிக்கொண்டிருக்கிறார். விரைவில் திரையரங்கில் சந்திக்கிறோம்
நன்றி.

படப்பிடிப்பின் முதல் நாள்...!
வானொலியில் பாடல் வெளியீட்டின் போது...

இவற்றோடு படத்தில் இயக்குனர் கானா வரோ, ஒளிப்பதிவாளர் நிரோஷ், எடிட்டர் மாதவன், இசை தர்ஷான், பாடல்வரிகள் இரோஷன், இவர்களோடு ஜனனி, ரஞ்சித், தினேஷ், ஷாலினி, கவிமாறன், கிருத்திகன் (இட்ஸ் மீ!) அன்ட் பலரது முயற்சியில் தயாராகிவருகிறது இலவு குறும்படம்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, January 1, 2014

2014 புது வருடம் தொடரட்டும் வெற்றிகள்


வணக்கம் எல்லாருக்கும்...
வழக்கம் போல பதிவுலகத்திலிருந்து பல மைல் தூரம் தள்ளியிருந்தாலும் இந்த இனிய புத்தாண்டின் ரம்மியமான தருணத்தில் என் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் நினைவு படுத்தி பார்க்கிறேன் இங்கு ஆரம்பித்த பல இனிய நட்புக்கள் கைகோர்த்து பல ஆக்கபூர்வமான வெற்றிக்கதைகளை உருவாக்கியிருக்கிறோம்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தேழோடு தோழ்கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய நாளில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதோடு அனைவருக்கும் இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாகவும் வளமானதாகவும் அமையவும்

இந்த வருடமும் நம் வெற்றிப்பயணங்கள் தொடர பல  சந்தர்ப்பங்கள் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

நன்றி

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails